நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 269 ரன்கள் குவித்துள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வென்றது. 2-வது டெஸ்ட் போட்டி, ஹாமில்டனில் தற்போது நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 375 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. நியூசிலாந்து அணியின் டாம் லாதம் 105 ரன்களும் மிட்செல் 73 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் பிராட் 4 விக்கெட்டுகளும் வோக்ஸ் 3 விக்கெட்டுகளும் சாம் குர்ரன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்துள்ளது. பர்ன்ஸ் 24 ரன்களுடனும் கேப்டன் ரூட் 6 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இதனைத் தொடர்ந்து இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியது. தொடக்கம் முதலே பர்ன்ஸ் மற்றும் கேப்டன் ரூட் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
சிறப்பாக விளையாடிய பர்ன்ஸ் 209 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் எடுத்தார். மூன்றாவது விக்கெட்டிற்கு ஜோ ரூட் மற்றும் பர்ன்ஸ் ஆகிய இருவரும் 177 ரன்கள் சேர்த்தனர். பர்ன்ஸ் 101 ரன்கள் எடுத்திருந்த போது ரன் அவுட் ஆனார். எனினும் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய கேப்டன் ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது 17ஆவது சதத்தை பதிவு செய்தார். இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் 26 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் இங்கிலாந்து அணி 99.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது. மழை நிற்காததால் நடுவர்கள் இன்றைய நாளின் ஆட்டம் முடிந்ததாக அறிவித்தனர். களத்தில் கேப்டன் ஜோ ரூட் 114 ரன்களுடனும், போப் 4 ரன்களுடனும் உள்ளனர். இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைவிட 106 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.