விளையாட்டு

அரைசதம் + 4 விக்கெட்; ஹர்திக்கிடம் வீழ்ந்த இங்கிலாந்து!

அரைசதம் + 4 விக்கெட்; ஹர்திக்கிடம் வீழ்ந்த இங்கிலாந்து!

webteam

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டி நடந்து முடிந்திருக்கிறது. இந்த போட்டியை இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பாக வென்றிருக்கிறது.

டெஸ்ட் போட்டியையே லிமிட்டெட் ஓவர் போல ஆடி இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு அதிர்ச்சி கொடுத்திருந்தது. டெஸ்ட்டிலேயே அந்த அடி அடிக்கிறார்கள் எனில், டி20 யில் எப்படி ஆடுவார்கள் என இந்திய ரசிகர்கள் கொஞ்சம் திகிலோடுதான் இந்த போட்டியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், இந்திய ரசிகர்கள் பயப்பட்ட அளவுக்கு எதுவும் நடக்கவில்லை. இங்கிலாந்தின் பார்மி ஆர்மியை சைலண்ட்டாக்கும் வகையிலேயே இந்திய வீரர்கள் பெர்ஃபார்ம் செய்திருக்கின்றனர்.

ரோஹித் சர்மாதான் டாஸை வென்றிருந்தார். முதலில் பேட்டிங் செய்யப்போவதாகவும் அறிவித்தார். இந்திய கேப்டன் ஒருவர் டாஸை வெல்வதே அரிதினும் அரிது. அந்த அரிய சம்பவமே இங்கே நிகழ்த்தப்பட்டுவிட்டதால் தொடக்கத்திலிருந்தே இந்தியாவிற்கு சாதகமான பாசிட்டிவிட்டி பரவ ஆரம்பித்தது.

முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்களை எடுத்திருந்தது. போட்டி நடைபெற்ற சவுத்தாம்ப்டன் மைதானத்தில் டி20 போட்டிகளில் முதல் இன்னிங்ஸ்களின் சராசரி ஸ்கோரே 168 ஆகத்தான் இருந்தது. இந்திய அணி அதை தாண்டியும் 30 ரன்களை கூடுதலாகத்தான் எடுத்திருந்தது. ஆக, இதை ஒரு சிறப்பான பேட்டிங் பெர்ஃபார்மென்ஸ் என்றே மதிப்பிடலாம்.

இந்திய அணியின் இந்த சிறப்பான பெர்ஃபார்மென்ஸிற்கு மூன்று வீரர்கள் முக்கிய காரணமாக இருந்தனர். தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா அந்த மூவர் இவர்களே. தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ் இருவருமே எதைப் பற்றியும் கவலைப்படாமல் 200 ஐ சுற்றிய ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கினர். மொயீன் அலியின் ஓவரில் ரோஹித் சர்மா எட்ஜ் ஆகி பட்லரிடம் கேட்ச் ஆகியிருந்தார். விக்கெட் எடுத்துவிட்டு மொயீன் அலி வீசிய அடுத்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளையுமே ஹூடா சிக்சராக பறக்கவிட்டிருந்தார். டாப்ளே வீசிய அடுத்த ஓவரிலும் மூன்று பவுண்டரிக்களை சிதறவிட்டார். ஓப்பனர்கள் இருவரையும் இழந்த போதும் பவர்ப்ளேயில் இந்திய அணியின் ரன்ரேட் 10 க்கு மேல் செல்வதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தார். இந்த ரன்ரேட்டை அப்படியே கீழே விழாமல் சீராக கொண்டு சென்றதற்கான க்ரெடிட்டை சூர்யகுமாருக்கே கொடுக்க வேண்டும். 19 பந்துகளில் 39 ரன்களை அடித்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 205. மிடில் ஆர்டரில் சூழலை பற்றியெல்லாம் யோசிக்காமல் ஈவு இரக்கமற்ற அதிரடியை வெளிக்காட்டும் பேட்ஸ்மேன்கள்தான் இந்திய அணிக்கு தேவையாக இருக்கின்றனர். அந்த இடத்தை இந்த போட்டியில் மேலே குறிப்பிட்ட இருவரும் கச்சிதமாக நிரப்பி வருகின்றனர்.

இவர்களை தாண்டி முக்கியத்துவம் பெற்றது ஹர்திக் பாண்ட்யா ஆடிய இன்னிங்ஸ்தான். ஹர்திக் அப்க்ரேடட் குஜராத் வெர்சன் இங்கேயும் தனது தேவையை உணர்ந்து சரியாக ஆடி காரியத்தை சாதித்துக் கொடுத்தது. விக்கெட்டுகள் வரிசையாக விழுந்த சமயத்தில் நின்று ஆடி அதேநேரத்தில் ஸ்ட்ரைக் ரேட்டிற்கும் எந்த சேதாரமும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டார். தனது முதல் சர்வதேச அரைசதத்தையும் கடந்திருந்தார். 33 பந்துகளில் 51 ரன்களை எடுத்திருந்தார். பார்க்கின்சன், லிவிங்ஸ்டன் போன்ற ஸ்பின்னர்களுக்கு எதிராக கொஞ்சம் கூடுதல் வேகத்துடன் ஆடியிருந்தார். இவர்களுக்கு எதிராக மட்டும் 17 பந்துகளில் 32 ரன்களை அடித்திருந்தார். கடைசி வரை நின்றிருந்தால் இன்னும் ருத்ரதாண்டவம் ஆடியிருப்பார். ஆனால், 18 வது ஓவரில் டாப்ளே ஹர்திக்கை வீழ்த்திவிட்டார். இதன்மூலம் ஒரு 10-20 ரன்கள் இந்தியாவிற்கு குறைந்து போனது. இறுதியில் 198 ரன்களை இந்திய அணி எடுத்தது.

ஓவருக்கு 10 ரன்கள் அடிக்க வேண்டும் என்பதால் இங்கிலாந்து அணி பவர்ப்ளேயை முழுமையாக பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள எண்ணும் என எதிர்பார்க்கப்பட்டது. இதில்தான் ஒரு ட்விஸ்ட்டும் நடந்தது. பவர்ப்ளே முழுமையாக சரியாக பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. ஆனால், அது இங்கிலாந்து பேட்ஸ்மேன்களால் அல்ல. இந்திய பௌலர்களால். இங்கிலாந்து அணி முதல் 6 ஓவர்கள் பவர்ப்ளேயில் 32 ரன்களை எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அங்கேயே இங்கிலாந்தின் தோல்வியும் உறுதி செய்யப்பட்டுவிட்டது.

இங்கிலாந்தை உருகுலைய வைத்ததில் புவனேஷ்வர் குமாரும் அறிமுக வீரரான அர்ஷ்தீப் சிங்கும் வீசிய முதல் இரண்டு ஓவர்கள் முக்கியமானதாக அமைந்தது. புவி வீசிய முதல் ஓவரில் ஜேசன் ராய்க்கு தொடர்ந்து அவுட் ஸ்விங்காக வீசிவிட்டு ஸ்ட்ரைக்குக்கு பட்லர் வந்தவுடன் ஒரு வெறித்தனமான இன்ஸ்விங்கை வீசியிருப்பார். அது பட்லரை ஏமாற்றி பேட்டுக்கும் பேடுக்கும் இடையில் புகுந்து லெக் ஸ்டம்பை தகர்த்திருக்கும். கேப்டன் பட்லர் டக் அவுட்!

அறிமுக வீரரான அர்ஷ்தீப் சிங் வீசிய அடுத்த ஓவர் முழுமையாக மெய்டன். அர்ஷ்தீப்பின் ஸ்விங்கை கணிக்க முடியாமல் ராய் திணறிப்போனார். தட்டும்த்தடுமாறி லெக் பைஸில் இரண்டு ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். இந்திய அணிக்கு கிடைத்த இந்த நல்ல தொடக்கத்தை ஹர்திக் வந்து இன்னும் சிறப்பானதாக மாற்றினார். ராய் ஒரு பக்கம் என்ன செய்வதென்றே புரியாமல் நிற்க இன்னொரு முனையில் இருந்த வீரர்களுக்கு பவர்ப்ளேயை பயன்படுத்தி ரன்ரேட்டை ஏற்ற வேண்டிய அழுத்தம் கூடியது. இந்நிலையில் ஹர்திக் வீசிய அந்த 5 வது ஓவரில் மட்டும் மலான், லிவிங்ஸ்டன் என இரண்டு முக்கியமான வீரர்களும் வீழ்ந்து போனர்.

ராயால் கடைசி வரை ஒன்றுமே செய்ய முடியவில்லை. 16 பந்துகளில் 4 ரன்களை மட்டுமே எடுத்திருந்தவர், ஹர்திக் வீசிய 7 வது ஓவரில் பதற்றத்தில் ஒரு ஷாட் ஆடி கேட்ச் ஆகி வெளியேறினார். இதன்பிறகு மொயீன் அலி, ப்ரூக் எல்லாம் நன்றாக ஆடியிருந்தாலும் வெற்றி பெற அது போதுமானதாக இல்லை. இங்கிலாந்து அணி 148 ரன்களுக்கே ஆல் அவுட் ஆனது.

இந்தியாவிடம் இங்கிலாந்து வீழ்ந்தது என்பதை விட சில வீரர்களின் ஒத்துழைப்புடன் விஸ்வரூபம் எடுத்த ஹர்திக்கிடம் இங்கிலாந்து வீழ்ந்தது என்றே சொல்லலாம். அதற்காகவே அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

-உ.ஸ்ரீராம்