விளையாட்டு

நெதர்லாந்தை துவம்சம் செய்த பட்லர்.. சொந்த சாதனையை முறியடித்து இங்கிலாந்து அணி மிரட்டல்

நெதர்லாந்தை துவம்சம் செய்த பட்லர்.. சொந்த சாதனையை முறியடித்து இங்கிலாந்து அணி மிரட்டல்

சங்கீதா

ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி தனது சொந்த சாதனையை முறியடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது.

நெதர்லாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகள் பங்கேற்றுள்ள முதல் ஒருநாள் போட்டி ஆம்ஸ்டெல்வீன் நகரில் உள்ள வி.ஆர்.ஏ. மைதானத்தில் நடைபெற்ற வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி, பீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் ஜேசன் ராய் ஒரு ரன்னுடன் வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் பில் சால்ட், 93 பந்துகளில் 14 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடித்து 122 ரன்களை குவித்து லோகன் வேன் பீக் பந்துவீச்சில் அவுட்டானார். மேலும் சர்வதேசப் போட்டியில் தனது முதல் சதத்தை அவர் பதிவு செய்தார். அவருடன் கூட்டணி சேர்ந்த மற்றொரு வீரர் டேவிட் மாலன் 109 பந்துகளில் 125 ரன்கள் அடித்தநிலையில், பீட்டர் சீலரிடம் பந்து வீச்சில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இந்த இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து 200 ரன்களுக்கு மேல் குவித்தனர்.

இதையடுத்து களமிறங்கிய அதிரடி ஆட்டக்காரர் ஜாஸ் பட்லர், நெதர்லாந்து பவுலர்களின் பந்துவீச்சை துவம்சம் செய்து 70 பந்துகளில் 162 ரன்கள் குவித்தார். இதில் 7 பவுண்டரிகள் மற்றும் 14 சிக்சஸர்களும் அடங்கும். கேப்டன் இயன் மோர்கன் டக் அவுட் ஆகி அதிர்ச்சியளித்த நிலையில், லிவிங்ஸ்டோன் 66 ரன்கள் அடித்தார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 498 ரன்கள் அடித்து ஒருநாள் போட்டியில் புதிய உலக சாதனை படைத்துள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 481 ரன்கள் குவித்ததே உலக சாதனையாக இருந்தது. இன்று அந்த சாதனை மீண்டும் இங்கிலாந்து அணியினாலேயே தகர்க்கப்பட்டுள்ளது. இதையடுத்து 499 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்கை நோக்கி நெதர்லாந்து அணி களத்தில் இறங்கியது. துவக்க ஆட்டக்காரரான விக்ரம்ஜித் சிங் 13 ரன்களிலேயே நடையை கட்ட, மேக்ஸ்வெல் பேட்டிரிக் (24) மற்றும் முசா அகமத் (10) களத்தில் உள்ளனர்.