விளையாட்டு

“இறுதிப் போட்டி முடிவு நியாயமானதல்ல” - இங்கிலாந்து கேப்டன் மோர்கன்

webteam

உலகக் கோப்பை தொடருக்கு இதுபோன்ற முடிவு ஏற்பட்டிருக்ககூடாது என்று கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் தெரிவித்துள்ளார். 

12ஆவது உலகக் கோப்பை தொடர் கடந்த 14ஆம் தேதி முடிவுடைந்தது. இந்தத் தொடரில் இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது. பரபரப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் 50 ஓவர்களில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் தலா 241 ரன்கள் குவித்தன.

இதனையடுத்து யார் வெற்றியாளர் என்று தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. இந்த சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் தலா 15 ரன்கள் எடுத்தன. இதனைத் தொடர்ந்து இந்தப் போட்டியில் அதிக பவுண்டரிகள் அடித்த அணியான இங்கிலாந்து உலகக் கோப்பையை வென்றது. உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியின் முடிவு பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் இந்த முடிவு குறித்து இங்கிலாந்து கேப்டன் மோர்கன் கருத்து தெரிவித்துள்ளார். அதில்,“பரபரப்பான இறுதிப் போட்டியில் எடுக்கப்பட்ட முடிவு நியாயமானதல்ல. இந்தப் போட்டியில் ஒரு தருணம் கூட ஒரு அணிக்கு சாதகமாக இருக்கவில்லை. இரு அணிகளும் சம பலத்துடன் விளையாடின. இந்தப் போட்டி குறித்து நான் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் இடமும் பேசினேன். அவரும் என்னை போலவே குழப்பத்தில் இருந்து வருகிறார். 

கிரிக்கெட் வரலாற்றில் இந்த இறுதிப் போட்டி மிகவும் சிறப்பு வாய்ந்த போட்டியாக அமைந்துள்ளது. இந்த அளவிற்கு மிகவும் சமமான போட்டி வேறு எப்போதும் நடைபெற்றதில்லை. எனினும் நாங்கள் உலகக் கோப்பையை வென்று உள்ளோம் அதற்காக நான் மகிழ்ச்சியடையதான் வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.