விளையாட்டு

விராத் கோலியுடன் வாக்குவாதம்: இங்கி. பந்துவீச்சாளருக்கு அபராதம்!

விராத் கோலியுடன் வாக்குவாதம்: இங்கி. பந்துவீச்சாளருக்கு அபராதம்!

webteam

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலியுடனும் நடுவருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி பேட் செய்தபோது, கேப்டன் விராத் கோலிக்கும், ஆண்டர்சனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. 29-வது ஓவரில் ஆண்டர்சன் வீசிய பந்து விராத் கோலி காலில் பட்டது. நடுவரிடம் எல்.பி.டபிள்யூ கேட்டார் ஆண்டர்சன். நடுவர் தர்மசேனா மறுத்துவிட்டார். அந்த ஓவர் முடிந்து நடுவரிடம் தொப்பியை வாங்கிச் செல்லும் போது கேப்டன் விராத் கோலியிடம் ஆவேசமாக ஆண்டர்சன் வாக்குவாதம் செய்தார். இதைத் தடுத்த நடுவர் தர்மசேனாவிடமும் ஆத்திரத்தோடு கத்தினார்.

இதுபற்றி போட்டி நடுவர் ஆன்டி பைகிராப்ட்டிடம் தர்மசேனா புகார் செய்தார். இந்தப் புகாரின் உண்மை குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார் ஆண்டர்சன். இதையடுத்து ஐசிசி ஒழுக்கவிதிமுறைகளை மீறியதற்காக, ஒரு மைனஸ் புள்ளியுடன் அவருக்கு வழங்கப்படும் சம்பளத்தில் 15% அபராதமும் விதிக்கப்பட்டது