சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் அஸ்வினின் சாதனையை முறியடிக்க பிராவோவிற்கு மூன்று விக்கெட்டுகளே தேவையாக இருக்கிறது.
ஐபிஎல் போட்டிகளில் பெரும் வெற்றிகளை குவிக்கும் அணிகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் இருக்கின்றன. இந்த இரண்டு அணிகளும் நாளை மறுநாள் யுஏஇ-ல் நடைபெறவுள்ள 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மோதவுள்ளன. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் பிராவோ 3 விக்கெட்டுகளை சாய்த்தால் முன்னாள் சென்னை வீரர் அஸ்வினின் சாதனையை முறியடிப்பார்.
சென்னை அணிக்காக 120 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின், மொத்தம் 121 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேசமயம் 103 போட்டிகளில் சென்னை அணிக்காக களமிறங்கியுள்ள பிராவோ 118 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். இன்னும் மூன்று விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினால் சென்னை அணியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற அஸ்வினின் சாதனையை முறியடிப்பார். ஐபிஎல் போட்டிகளில் மொத்தம் 134 போட்டிகளில் விளையாடியிருக்கும் பிராவோ 147 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
2013 மற்றும் 2015 ஆகிய இரண்டு ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பில் விளையாடி, அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய நபர் என்பதற்காக நீல நிற தொப்பியை பிராவோ வென்றிருக்கிறார். இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக மட்டும் 19 போட்டிகளில் பங்கேற்றுள்ள பிராவோ 28 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அனைத்து பவுலர்களையும் விட இவரே மும்பைக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவர் ஆவார். அண்மையில் டி20 போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை பிராவோ எட்டியது குறிப்பிடத்தக்கது.