விளையாட்டு

“இந்தத் தலைப்பே தப்பு”- லஷ்மண் புத்தகம் பற்றி சவுரவ் கங்குலி

“இந்தத் தலைப்பே தப்பு”- லஷ்மண் புத்தகம் பற்றி சவுரவ் கங்குலி

webteam

குறைவான போட்டிகளில் விளையாடி இருந்த நிலையில், ஒருநாள் போட்டிக்கான அணியில் இருந்து விவிஎஸ் லஷ்மணை நீக்கியது ஒரு தவறான முடிவாக இருக்கலாம் என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். 

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான லஷ்மண் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான பங்களிப்பை செலுத்தி உள்ளார். 134 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 17 சதம், 56 அரைசதங்கள் உட்பட 8781 ரன்கள் குவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு மிகவும் நெருக்கடி கொடுத்தவர் லஷ்மண்தான். 

குறிப்பாக 2001, மார்ச் 11-15 இல் நடைபெற்ற டெஸ்ட் போட்டி அதற்கு சிறப்பான உதாரணம். அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன் குவித்தது. ஆனால், இந்திய அணி 171 ரன்களுக்கு ஆட்டமிழந்து, பாலோ ஆன் ஆனது. 274 ரன்கள் பின் தங்கியிருந்ததால் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடையும் என்று கணிக்கப்பட்டது. 

ஆனால், விவிஎஸ் லஷ்மணி அபார ஆட்டத்தால், இந்திய அணி 657 ரன்கள் குவித்தது. லஷ்மண் 281 ரன்னும், டிராவிட் 180 ரன்களும் குவித்தனர். அந்தப் போட்டியில் இந்திய அணி 171 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி அடைந்தது. அந்தப் போட்டியில் வெற்றதால், விமர்சனங்களுக்கு உள்ளாகி வந்த கங்குலியின் கேப்டன் பதவியும் தப்பியதாக கருதப்பட்டது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி என்றாலே லஷ்மண் தான் நினைவிற்கு வருவார். 

ஆனால், விவிஎஸ் லஷ்மண் வெறும் 86 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். 6 சதங்கள் உட்பட 2338 ரன்கள் அவர் ஒருநாள் போட்டிகளில் அவர் எடுத்திருந்தார். 2006, டிசம்பரில் தென்னாப்ரிக்கா அணிக்கு எதிராக தனது கடைசி ஒருநாள் போட்டியை விளையாடி இருந்தார். ஆனால், டெஸ்ட் போட்டிகளில் 2012 ஆம் ஆண்டு வரை விளையாடியுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், லஷ்மண் கிரிக்கெட் வாழ்க்கை தொடர்பாக ‘281,அதற்கு அப்பால்’ என்ற புத்தகம் வெளியாகியுள்ளது. இந்தப் புத்தகம் தொடர்பாக கங்குலி பேசுகையில், “புத்தகத்தின் தலைப்பு எனக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. அது சரியானது தலைப்பு அல்ல. அந்தத் தலைப்பு, ‘281, அதற்கு அப்பால் மற்றும் காப்பாற்றப்பட்ட சவுரவ் கங்குலியின் கிரிக்கெட் வாழ்க்கை’ என்று இருந்திருக்க வேண்டும்.

இது தொடர்பாக ஒரு மாதத்திற்கு முன்பே நான் லஷ்மணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தேன். ஆனால், அவர் பதில் அளிக்கவில்லை. அந்தத் தலைப்பை நான் கடுமையாக எதிர்க்கிறேன். அவர் 281 ரன் அடிக்கவில்லை என்றால், இந்திய அணி தோல்வி அடைந்திருக்கும். நான் கேப்டனாக தொடர்ந்திருக்க மாட்டேன்” என்று கூறினார். 

மேலும், விவிஎஸ் லஷ்மணை ஒருநாள் போட்டிக்கான அணியில் இருந்து நீக்கியது ஒரு தவறான முடிவாக இருக்கலாம் என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். “லஷ்மண் எல்லா வகையான கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடியவர். அவரை ஒருநாள் அணியில் இருந்து நீக்கியது ஒரு தவறாக இருக்கலாம். ஒரு கேப்டனாக நீங்கள் எடுக்கும் முடிவுகள் சில நேரங்களில் சரியாகவோ அல்லது தவறாகவோ இருக்கலாம்” என்றார் கங்குலி.