இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடரின் முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷேன் டோவ்ரிச் அபார சதம் அடித்தார்.
இலங்கை கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இந்த அணிகளுக்கான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் நேற்று முன் தினம் தொடங்கியது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஹோல்டர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் நாள் முடிவில் அந்த அணி, 6 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது இளம் வீரர் ஷேன் டோவ்ரிச் 45 ரன்களுடனும் பிஷூ ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. டோவ்ரிச் அபாரமாக ஆடி, சதம் அடித்தார். அவர் 125 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார்.
அந்த அணி, 8 விக்கெட் இழப்புக்கு 414 ரன்கள் எடுத்திருந்த போது, டிக்ளேர் செய்யப்பட்டது. இலங்கை தரப்பில் லஹிரு குமரா 4 விக்கெட்டு களையும் லக்மல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி, வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடக்க விக்கெட்டுகளை எளிதாக இழந்தது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் அந்த அணி, 3 விக்கெட் இழப்புக்கு 31 ரன்கள் எடுத்துள்ளது. மூன்றாவது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.