விளையாட்டு

ஒலிம்பிக் கனவுக்கு தடையாக இருக்கும் ஏழ்மை - ராமநாதபுரம் வீராங்கனைக்கு உதவுமா தமிழக அரசு?

ஒலிம்பிக் கனவுக்கு தடையாக இருக்கும் ஏழ்மை - ராமநாதபுரம் வீராங்கனைக்கு உதவுமா தமிழக அரசு?

Sinekadhara

தென்னிந்திய அளவில் குண்டு எறிதல் போட்டியில் தங்கம் வென்ற எல்லை பாதுகாப்பு படை வீரரின் மகள், கர்நாடக வீராங்கனையின் சாதனையை முறியடித்த தமிழக வீராங்கனை, பயிற்சி பெற உபகரணங்கள் இல்லாமல் பரிதவித்து வருகிறார். 

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரரான முருகானந்தம் என்பவரின் மகள் ஷர்மிளா. இவர் கடந்த 2016 ஆண்டிலிருந்து தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் நடைபெறும் குண்டு எறிதல் போட்டியில் கலந்துகொண்டு பல்வேறு பதக்கங்களும் சான்றிதழ்களும் பெற்றுள்ளார்.

இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கேரளாவில் உள்ள கோழிக்கோடு என்ற இடத்தில் தென்னிந்திய அளவிலான 18 வயதிற்கு உட்பட்ட மாணவிகளுக்கான குண்டு எறிதல் போட்டி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஷர்மிளா முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கம் வென்று தமிழகத்திற்கும் ராமநாதபுரம் மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார். மேலும் ஏற்கனவே கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வீராங்கனையின் சாதனையை தமிழகத்தை சேர்ந்த வீராங்கனையான ஷர்மிளா முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், எல்லை பாதுகாப்பு படை வீரரின் மகளான தான் ஒவ்வொரு முறையும் போட்டிகளில் கலந்துகொள்ள செல்வதற்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை செலவு ஆவதாகவும், உரிய பயிற்சி பெறுவதற்கு உபகரணம் இல்லாமல் பரிதவித்து வருவதாகவும் தெரிவிக்கின்றார். இதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து முறையான பயிற்சி அளித்தால் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு தங்கம் வெல்ல முடியும் என்று மன உறுதியுடன் தெரிவித்துள்ளனர்.

மேலும் தாங்கள் வாடகை வீட்டில் வசித்து வருவதோடு எல்லை பாதுகாப்பு படை வீரருக்கு கிடைக்கும் சம்பளத்தை முழுமையாக தங்களது மகளின் லட்சியமான ஒலிம்பிக்கில் வெல்ல வேண்டும் என்ற கனவை நிறைவேற்றுவதற்காக மிகுந்த கஷ்டப்பட்டு போட்டிகளில் கலந்து கொள்வதற்க அனுப்பி வைத்து வருவதாக தெரிவிக்கின்றனர் ஷர்மிளாவின் பெற்றோர்.