விளையாட்டு

ரன் குவித்தவர்கள் பெஞ்சில்; சொதப்பியவர்கள் அணியில் - வீரர்கள் தேர்வில் தவறுகிறதா இந்தியா?

ரன் குவித்தவர்கள் பெஞ்சில்; சொதப்பியவர்கள் அணியில் - வீரர்கள் தேர்வில் தவறுகிறதா இந்தியா?

EllusamyKarthik

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. நாளை அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்க உள்ள முதல் டெஸ்ட் போட்டி பகல்  இரவு  ஆட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்றே இந்த போட்டியில் இந்திய அணி சார்பில் விளையாட உள்ள 11  வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது பிசிசிஐ. 

அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் யார்? யார்?

விராட் கோலி (கேப்டன்), மயங்க் அகர்வால், பிருத்வி ஷா, பூஜாரா, ரஹானே (துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, சாஹா, அஸ்வின், உமேஷ் யாதவ், பும்ரா, ஷமி ஆகிய வீரர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர். 

இந்த அணி தேர்வில் பிசிசிஐ சில தவறுகளை செய்துள்ளதாக சுட்டி காட்டியுள்ளனர் கிரிக்கெட் விமர்சகர்கள்…

கே.எல்.ராகுலை சேர்க்காதது ஏன்?

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே.எல்.ராகுலை சேர்க்காதது  இந்தியாவுக்கு தான்  இழப்பு என சொல்லப்படுகிறது. கோலி, ரஹானே மாதிரியான பேட்ஸ்மேன்கள் பெரிய ஸ்கோர்களை எடுக்காத பட்சத்தில் பின்வரிசையில் களம் இறங்கும் ராகுல் இந்திய அணிக்கு வலு சேர்ப்பார். கடந்த ஐபிஎல் தொடரில் அவரது ஆசத்தலான ஆட்டமே அதற்கு சான்று. இன்னிங்க்ஸை நிலைத்து நின்று ஆடும் திறமை கொண்டவர் ராகுல். 

ரிஷப் பண்ட் அணியில் இல்லாதது

இந்திய கிரிக்கெட் அணியின் மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பண்ட் ஆஸ்திரேலியாவில் கடந்த 2018 - 19 தொடரின் போது நான்கு போட்டிகளிலும் விளையாடிய அனுபவம் கொண்டவர். அதில் சிட்னியில் 159 ரன்களை அவர் குவித்துள்ளார். அதே போல அண்மையில் முடிந்த பயிற்சி ஆட்டத்திலும் அதிவேகமாக 73 பந்துகளில் சதம் அடித்திருந்தார் பண்ட். ஆஸ்திரேலிய மண்ணில் அவரது பேட்டிங் சராசரி 58.33 ஆகும். அவர் அணியில் இல்லாதது பின்னடைவாக இருக்கலாம். 

சுப்மன் கில்லுக்கு மாற்றாக பிருத்வி ஷா

இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவர் சுப்மன் கில். ஆஸ்திரலேய ஏ அணிக்கு எதிரான பயிற்சி  ஆட்டத்தில் 0, 19, 43, 65 ரன்களை விளாசியுள்ள கில்லுக்கு மாற்றாக ஷா ஓப்பனிங்கில் இறங்கி விளையாடுவது ஏன் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. ஷா பயிற்சி ஆட்டத்தில் 0, 19, 40, 3 ரன்களை மட்டுமே எடுத்த்துள்ளார். மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியும் ஷா அணியில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வழிநடத்தும் கேப்டன் கோலி அதை முடித்த கையோடு இந்தியா திரும்ப உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  அவர் இல்லாத பட்சத்தில் அணி தேர்வில் இந்த மாதிரியான செயல்பாட்டை பிசிசிஐ தொடர்ந்தால் இந்தியாவுக்கு அது சிக்கலாக அமையலாம் என்றும் கருத்துகள் முன் வைக்கப்பட்டுள்ளன.