விளையாட்டு

‘ரவி சாஸ்திரிக்கு இந்த 2 விஷயங்களில் சகிப்புத் தன்மை மிக குறைவு’ - தினேஷ் கார்த்திக் தகவல்

‘ரவி சாஸ்திரிக்கு இந்த 2 விஷயங்களில் சகிப்புத் தன்மை மிக குறைவு’ - தினேஷ் கார்த்திக் தகவல்

சங்கீதா

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தனது பதவிக் காலத்தில், இரண்டு விஷயங்களுக்காக அணியின் வீரர்களை பாராட்டியதில்லை என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி இருந்த காலத்தில், இந்திய அணி பல்வேறு போட்டிகளில் வெற்றிக் கண்டது. குறிப்பாக ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரை வென்று, சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதி ஆட்டம்வரை இந்திய அணி சென்று போராடியது அனைவரையும் கவனிக்கவைத்தது. மேலும் ரவி சாஸ்திரி இந்திய அணியை வழிநடத்தியபோது, புதிய அணுகுமுறையை பயன்படுத்தியதாகவும் கூறுவது உண்டு.

இந்நிலையில், ரவி சாஸ்திரி தனது பதவிக் காலத்தில், இரண்டு விஷயங்களுக்காக அணியின் வீரர்களை பாராட்டியதில்லை என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ஒரு குறிப்பிட்ட வேகத்தில் பேட் செய்யாத வீரர்களையும், வலைப் பயிற்சியில் மேற்கொண்ட முயற்சிகளை ஒப்பிடும்போது போட்டியில் ஏதாவது ஒரு வீரர் வித்தியாசமாக விளையாடினால், அவர் சகித்துக்கொள்வதில்லை என்றும் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

மேலும் அவ்வாறு செய்யும் வீரர்களை அவர் பாராட்டுவதில்லை என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். வீரர்கள் விளையாடிய விதம் மற்றும் அணியில் வீரர்களிடமிருந்து இருந்து என்ன வேண்டும் என்பதையும் ரவி சாஸ்திரி சரியாக தெரிந்து வைத்திருப்பார் என்றும், ஆனால் தோல்விகள் வரும்போது அவரது சகிப்புத் தன்மை குறைவாகவே இருக்கும் எனவும் தினேஷ் கார்த்திக் குறிப்பிட்டுள்ளார். எப்போதும் அணியில் உள்ள வீரர்கள் நன்றாக விளையாடுவதற்கு அவர் உத்வேகப்படுத்திக்கொண்டே இருப்பார் என்றும் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

வீரராக அவர் சாதித்ததைக் காட்டிலும், பயிற்சியாளராக தனது திறமையை ரவி சாஸ்திரி பூர்த்தி செய்துள்ளதாகவும், எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல்பட்டதாகவும் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். எப்போதும் சிறப்பான விஷயங்களைச் சாதிக்க, வீரர்களை ரவி சாஸ்திரி உற்சாகப்படுத்திக் கொண்டே இருப்பார் எனவும் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.