விளையாட்டு

நியூசி.க்கு எதிரான டெஸ்ட்: இலங்கை அணி அபார வெற்றி

நியூசி.க்கு எதிரான டெஸ்ட்: இலங்கை அணி அபார வெற்றி

webteam

நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலேவில் நடந்து வந்தது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 249 ரன்களும், இலங்கை 267 ரன்களும் எடுத்தன. 18 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 285 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. இதனால் இலங்கைக்கு 268 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை நோக்கி இலங்கை அணி 2 வது இன்னிங்ஸ் ஆட்டத்தை தொடர்ந்தது. 

தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் கருணாரத்னேவும், திரிமன்னேவும் நிதானமாக ஆடினர். நேற்றைய ஆட்ட நேர முடிவில் அந்த அணி, விக்கெட் இழப்பின்றி 133 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி நாள் ஆட்டத்தை இன்று தொடர்ந்தது. சிறப்பாக ஆடிய திரிமன்னே 64 ரன்னிலும் மெண்டிஸ் 10 ரன்னிலும் பெரேரே 23 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

ஒரு பக்கம் விக்கெட் சரிந்தாலும் கருணாரத்னே சிறப்பாக ஆடி, சதம் அடித்தார். அணியின் ஸ்கோர் 218 ஆக இருந்தபோது அவர் 122 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மேத்யூஸும் டி சில்வாவும் நிதானமாக ஆடி, அணியை வெற்றி பெற வைத்தனர்.

இலங்கை அணி 4 விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கருணாரத்னே ஆட்டநாயகன் விருது பெற்றார்.