விளையாட்டு

போதையில் கார் ஓட்டி விபத்து: கிரிக்கெட் வீரருக்கு ரூ.5 லட்சம் அபராதம்!

போதையில் கார் ஓட்டி விபத்து: கிரிக்கெட் வீரருக்கு ரூ.5 லட்சம் அபராதம்!

webteam

போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் திமுத் கருணாரத்னேவுக்கு, இலங்கை கிரிக்கெட் வாரியம் ரூ.5 லட்சம் அபராதம் விதித்தது.

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் திமுத் கருணாரத்னே. சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் நடந்த டெஸ்ட் தொடரில் இவரது அதிரடியால் இலங்கை அணி அங்கு டெஸ்ட் தொடரை வென்று சாதனைப் படைத்தது. இதையடுத்து உலகக் கோப்பைக்கான இலங்கை அணிக்கு இவரை கேப்டனாக நியமிக்கப் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இவர் கடந்த 31 ஆம் தேதி அதிகாலை கொழும்பு, கின்சி சாலையில் காரில் சென்றுகொண்டிருந்தார். வெரல்லா பகுதியில் வந்தபோது, ஆட்டோ ஒன்றின் மீது மோதினார். இதில் ஆட்டோ ஓட்டுனர் படுகாயமடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து போலீசார், கருணாரத்னேவிடம் விசாரித்தபோது, அவர் குடி போதையில் இருந்தது தெரிய வந்தது. பின் அவர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். 

இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த இலங்கை கிரிக்கெட் வாரியம், வீரர்களின் நடத்தை விதியை மீறிய கருணாரத்னே மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து இருந்தது. இதன் படி கருணாரத்னேவுக்கு, 7500 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 5 லட்சம்) அபராதம் விதித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. ‘உலக கோப்பைக்குத் தயாராகி கொண்டிருக்கும் நிலையில் இதுபோன்ற செயலை சகித்து கொள்ள முடியாது’ என்று இலங்கை கிரிக்கெட் வாரிய செயலாளர் தெரிவித்துள்ளார்.