விளையாட்டு

தோனி கேப்டன்ஷிப்பை கோலி பறித்தாரா? கொளுத்திப் போட்ட முன்னாள் பயிற்சியாளர் ஸ்ரீதர்!

தோனி கேப்டன்ஷிப்பை கோலி பறித்தாரா? கொளுத்திப் போட்ட முன்னாள் பயிற்சியாளர் ஸ்ரீதர்!

webteam

டெஸ்ட் அணி கேப்டனாய்ப் பொறுப்பேற்ற பிறகு, ஒருநாள், டி20 அணிகளுக்கும் கேப்டன் ஆக விராட் கோலி கடும் முயற்சி செய்ததாக, இந்திய அணியின் முன்னாள் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2014 - 2021ஆம் ஆண்டுவரை இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக இருந்தவர் ஆர்.ஸ்ரீதர். இவருடைய பயிற்சிக் காலத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களாக மகேந்திர சிங் தோனி, விராட் கோலி ஆகியோர் இருந்தனர். இந்த நிலையில், விராட் கோலி டெஸ்ட் கேப்டன் ஆனதற்குப் பிறகு, உடனேயே ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கும் கேட்பனாக விரும்பியதாக ஆர்.ஸ்ரீதர் தன்னுடைய சுயசரிதை நூலில் குறிப்பிட்டிருப்பது விமர்சனத்தை எழுப்பியிருக்கிறது.

இந்திய அணியின் முன்னாள் ஃபீல்டிங் பயிற்சியாளரான ஆர்.ஸ்ரீதர், தன் கிரிக்கெட் வாழ்க்கை குறித்து நூல் ஒன்றை எழுதியுள்ளார். ‘பயிற்சிக்கு அப்பால்: இந்திய கிரிக்கெட் அணியுடன் எனது நாட்கள்’ (Coaching Beyond: My Days With Indian Cricket Team) என்ற அந்த நூலின் 42 அத்தியாயத்தில், 2016ஆம் ஆண்டு விராட் கோலி கேப்டன் ஷிப்புக்கு ஆசைப்பட்டதாகவும், அதற்கு அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ’பொறுமையாக இரு’ எனக் கூறியதாகவும் குறிப்பிடுகிறது. அந்த புத்தகத்தில், ‘‘டெஸ்ட் கேப்டன் பதவியை பெற்ற உடனே, கோலி மூன்றுவித அணிகளுக்கும் கேப்டனாகச் செயல்பட கடுமையாக முயற்சி செய்து வந்தார்.

இதனை அறிந்த ரவி சாஸ்திரி, ஒருநாள் இரவு கோலியை தனது அறைக்கு அழைத்து, ‘தோனியாக விலகியதால்தான், டெஸ்ட் கேப்டன் பதவி உனக்கு கிடைத்தது. ஒருநாள் மற்றும் டி20 அணி கேப்டன்கள் பதவியையும் அவரே ராஜினாமா செய்யும் வரை காத்திரு. அதுவரை நீ பொறுமையாகத்தான் இருந்தாக வேண்டும். ‘தோனியே அந்தப் பதவியை உனக்கு வழங்குவார். அதுவரை நீ பொறுமையாக இருக்க வேண்டும். நீ தோனிக்கு மரியாதை கொடுக்க வேண்டும்.

அப்போதுதான், நாளை நீ கேப்டனாக வரும்போது, வீரர்கள் உன்னை மதிப்பார்கள். அதைவிட்டுவிட்டு, வேறு வழியில் கேப்டன் பதவியை அடைய முற்பட்டால், அந்த விஷயம் வீரர்களுக்கு தெரிந்தால், அது உனது கிரிக்கெட் வாழ்க்கைகே பெரும் பிரச்சினையாக மாறிவிடும்’ “ என ரவி சாஸ்திரி எச்சரித்ததாக ஸ்ரீதர் அதில் பதிவிட்டுள்ளார்.

மேலும், ரவி சாஸ்திரியின் இந்த அறிவுரையை விராட் கோலி பின்பற்றியதால்தான், தோனியுடன் நல்ல உறவை பேண முடிந்ததாகவும், கோலி விவகாரத்தை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சிறப்பாக கையாண்டதாகவும் ஸ்ரீதர் அதில் தெரிவித்துள்ளார்.

- ஜெ.பிரகாஷ்