ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இந்திய டி20 அணி வீரர்களைச் சந்தித்துள்ளார் முன்னாள் கேப்டன் தோனி.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நியூசிலாந்து அணி, ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. சமீபத்தில் இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஒருநாள் தொடரை, இந்திய அணி 3-0 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிபெற்றதுடன், ஐசிசி தரவரிசைப் பட்டியலிலும் முதல் இடத்தைப் பிடித்தது. இவ்விரு அணிகளுக்கான டி20 தொடர் நாளை (ஜனவரி 27) தொடங்க உள்ளது. முதல் போட்டி நாளை ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற உள்ளது. இதற்காக கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி அங்கு சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், முன்னாள் கேப்டன் தோனி, அங்கு திடீரென சென்று இளம் வீரர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். ஜார்க்கண்ட்டில் உள்ள ராஞ்சிதான் தோனியின் சொந்த ஊராகும். இதையடுத்தே, அங்கு சென்ற இளம் வீரர்களைச் சந்தித்து ஆலோசனைகள் வழங்கியுள்ளார். இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டிருக்கும் வீடியோவில், வீரர்களின் உடைமாற்றும் அறையில் தோனி, இளநீரைப் பருகியபடி ஹர்திக் பாண்டியா மற்றும் அணியினருடன் உரையாடுவது தெரிகிறது.
முன்னதாக தோனியின் வீட்டிற்கு நேற்றிரவு ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட சிலர் சென்றுள்ளனர். அவரின் வீட்டில் உள்ள பிரத்யேக வாகனங்களை அவர்கள் பார்த்து ரசித்தனர். அப்போது பாண்டியாவும் தோனியும் பைக்கில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது.
கடந்த 2020ஆம் ஆண்டுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற தோனி, தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறது. இந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்க இருக்கும் ஐபிஎல் போட்டிக்காக, அவர் ராஞ்சி மைதானத்தில் கடந்த வாரம் பயிற்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.