விளையாட்டு

ஓய்வு பெறுவது குறித்து யோசிக்கிறாரா தோனி?: தோனியின் மேலாளர் விளக்கம்!!

ஓய்வு பெறுவது குறித்து யோசிக்கிறாரா தோனி?: தோனியின் மேலாளர் விளக்கம்!!

webteam

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்தெல்லாம் அவர் யோசிக்கவில்லை என தோனியின் மேலாளர் தெரிவித்துள்ளார்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் நடக்கவில்லை. மேலும் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்து டி20 உலகக் கோப்பை போட்டியும் ஒத்திவைக்கப்பட இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இதனால் தோனியின் ரசிகர்கள் மிகவும் கவலையில் இருக்கின்றனர். எங்கே தோனி சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிடுவாரோ என்பதுதான் அது. மேலும் பல வீரர்கள் தோனி மீண்டும் அணிக்குத் திரும்புவது குறித்து தங்களது கருத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் ரன் அவுட் ஆகி வெளியேறிய தோனி மீண்டும் இதுவரை களத்தில் இறங்கவே இல்லை. ஐபிஎல் போட்டிகளை எதிர்பார்த்திருந்த நேரத்தில் கொரோனா குறுக்கிட்டது. இந்நிலையில் தற்போது தன்னுடைய வீட்டில் குடும்பத்துடன் நேரம் செலவழித்தும், விவசாயம் செய்தும் தன்னுடைய நேரத்தைக் கழித்து வருகிறார் தோனி.

இந்நிலையில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்தெல்லாம் தோனி யோசிக்கவில்லை என அவரின் மேலாளர் தெரிவித்துள்ளார். தோனியின் நண்பரும் மேலாளருமான மிகில் திவாரகர் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு இது குறித்து பேசியுள்ளார். அதில், நண்பர்களான நாங்கள் அவரின் கிரிக்கெட் குறித்தெல்லாம் பேசிக்கொள்வதில்லை. ஆனால் அவரைப் பார்க்கையில் அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்தெல்லாம் அவர் யோசிக்கவில்லை.

அவர் ஐபிஎல் போட்டிகளில் விளையாட ஆயத்தமாகவும், ஆர்வமாகவும் இருந்தார். இதற்காக கடுமையாக உழைத்தார். ஒரு மாதம் முன்னதாகவே சென்னைக்கு வந்து தன்னுடைய பயிற்சியையும் தொடங்கியது அனைவருக்கும் தெரியும். ஐபிஎல் குறித்து பிசிசிஐ பல நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் ஐபிஎல் நடந்தால் தோனி மீண்டும் களத்தில் உச்சம் தொடுவார். இந்த ஊரடங்கு நேரத்திலும் தோனி தன்னை பிட்டாகவே வைத்திருக்கிறார். இந்த கொரோனா முடிந்து நிலைமை சீரானால் மீண்டும் பயிற்சியை அவர் தொடங்குவார். என தெரிவித்துள்ளார்