இந்தியாவில் ஒரு சிறு நகரத்தில் இருந்து உருவாகி, இந்திய கிரிக்கெட்டிற்கே மணிமகுடமாக திகழ்ந்த தோனியின் சில சாதனைகளை முறியடிப்பது அவ்வளவு எளிதல்ல!
எல்லாச் சாதனைகளும் ஒருநாள் முறியடிக்கப்படும். அதுதான் இயற்கை நியதி. ஆனால் சில சாதனைகள் மட்டும் முறியடிக்கப்படாமல் வெகுநாட்களுக்கு நீடிக்கும். அந்த மாதிரியான மகத்தான சாதனைகளை நிகழ்த்தியவர்களில் தோனியும் ஒருவர். இந்தியாவில் ஒரு சிறு நகரத்தில் இருந்து உருவாகி, இந்திய கிரிக்கெட்டிற்கே மணிமகுடமாக திகழ்ந்த தோனியின் சில சாதனைகளை முறியடிப்பது அவ்வளவு எளிதல்ல! அப்படி தோனி நிகழ்த்திக் காட்டிய 7 மகத்தான சாதனைகள் இதோ!
1. அனைத்து ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன்!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக தோனி இருந்த சமயத்தில் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை எந்த கேப்டனும் செய்யாத ஒரு அரிய சாதனையை நிகழ்த்தினார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி நடத்தும் மூன்று ஐசிசி கோப்பைகளையும் வென்று சரித்திர சாதனையை நிகழ்த்தினார் அவர். 2007 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை, 2011 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை, 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி என மூன்று கோப்பைகளை இந்திய அணி முத்தமிட்டது தோனி தலைமையில் தான்.
டெஸ்ட் சாம்பியனுக்கு வழங்கப்படும் கதாயுதத்தையும் 2010 மற்றும் 2011 ஆண்டுகளில் வென்று சாதனை படைத்தார். இதன்மூலம் டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வடிவங்களுக்குமான ஐசிசி கோப்பைகளையும் தன்வசமாக்கிய ஒரே கேப்டனாக தோனி திகழ்கிறார். இனியும் அவர் மட்டுமே திகழ்வதற்கான வாய்ப்புகளே உள்ளது. ஐசிசி தொடர்களில் 4 முக்கிய இறுதிப்போட்டிகளில் இந்திய அணியை தலைமையேற்று வழிநடத்தி சென்றார் தோனி. இதன்மூலம் இம்ரான் கான் மற்றும் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை சமன் செய்தார் தோனி.
2. மறக்க முடியுமா மின்னல் வேக ஸ்டம்பிங்கை!
2018 ஆம் ஆண்டு நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் ஒரு மேஜிக்கை நிகழ்த்தினார். எதிரணி வீரர் கீமோ பாலை ஸ்டம்பிங் செய்து வெளியேற்றினார். தோனி ஸ்டம்பிங் செய்வது கிரிக்கெட்டில் மிக இயல்பான விஷயம். ஆனால் கீமோ பாலை ஸ்டம்பிங் செய்ய தோனி எடுத்துக் கொண்ட கால அளவு வெறும் 0.08 விநாடிகள் மட்டுமே.
ஏற்கனவே மின்னல் வேக ஸ்டம்பிங்கிற்கான உலக சாதனை தோனி வசம் தான் இருந்தது. 0.09 விநாடிகளில் அந்த ஸ்டம்பிங்கை தோனி நிகழ்த்தி இருந்தார். ஆனால் தனது சாதனையை தானே முறியடித்து மலைக்க வைத்தார் தோனி. இயல்பாக மனிதக்கண்ணில் ஒரு காட்சித் தூண்டுதல் பதிவாவதற்கு 0.25 விநாடிகள் ஆகும் நிலையில் அதில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தில் ஸ்டம்பிங் செய்து சாதனை படைத்தார்.
3. அதிக ஸ்டம்பிங் செய்ததும் அவரே!
தோனியின் அபாரமான பேட்டிங், கேப்டன்ஷிப் எல்லாம் ஒரு புறம் இருக்க, அவரது மின்னல் வேக ஸ்டம்பிங்கள் தான் அவருக்கு மிக அதிக ரசிகர்களை பெற்றுத்தர முக்கிய காரணம் என்பதை மறுக்கவியலாது. ஸ்டம்பிற்கு பின்புறம் தோனி இருந்தால், நீங்கள் மறந்தும் உங்கள் கால்களை கிரீஸில் இருந்து நகர்த்தக் கூடாது. மீறி நகர்த்தினால் சந்தேகமே வேண்டாம்! அவுட் தான்!
538 சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ள தோனி 195 ஸ்டம்பிங் செய்துள்ளார். அதிக ஸ்டம்பிங் செய்த விக்கெட் கீப்பர்களில் நெடுநாள்களாக முதலிடத்தில் இருக்கிறார். இனியும் இருப்பார்! இரண்டாவது இடத்தில் இருக்கும் இலங்கையின் குமார் சங்கக்கரா 139 ஸ்டம்பிங் செய்துள்ளார். வருங்காலத்தில் பல ஜாலங்களை நிகழ்த்தும் ஒரு அசாதாரண விக்கெட் கீப்பர் வந்தாலும், அவர் மூன்று வடிவங்களிலும் தனது திறமையை வெளிக்காட்டி 195 ஸ்டம்பிங்கை தாண்டுவது நடைமுறையில் சாத்தியமற்றதாகவே பார்க்கப்படுகிறது.
4. ஐசிசி ஒருநாள் தரவரிசையில் மிக வேகமாக நம்பர் 1 இடத்தை பிடித்தவர்!
பொதுவாக ஒருநாள் போட்டி தரவரிசையில் நம்பர் 1 இடம் என்பது முதல் 3 இடங்களில் களமிறங்குபவர்களால் நிரப்பப்படும். ஆனால் 2010 ஆம் ஆண்டு ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தில் இடம்பிடித்தார் தோனி. ஆனால் அவர் களமிறங்கிக் கொண்டிருந்த இடங்கள் 5 மற்றும் 7 ஆகும். இந்த நம்பர் 1 இடத்தை பிடிப்பதற்கு தோனி எடுத்துக் கொண்ட போட்டிகள் எத்தனை தெரியுமா? வெறும் 42 போட்டிகள் மட்டுமே!
மிக வேகமாக ஐசிசி ஒருநாள் தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடித்த வீரர் என்ற மகத்தான சாதனை தோனி வசமானது. முன்னதாக ரிக்கி பாண்டிங் இந்த சாதனையை தன்வசம் வைத்திருந்தார். அவரிடம் இருந்த இச்சாதனையை முறியடிக்க முடியாது என்று ஆருடங்கள் சொல்லப்பட்டன. ஆனால் அவை அத்தனையையும் தகர்ந்து எறிந்தார் தோனி. தோனி அந்த நம்பர் 1 இடத்தில் இருந்தபோது கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 4வது இடத்தில் இடம்பெற்றிருந்தார்.
5. கேப்டனாக அதிக சர்வதேச போட்டிகளில் தலைமையேற்றவர்!
தோனி தலைமையில் இந்திய அணி 60 டெஸ்ட் போட்டிகள், 200 ஒருநாள் போட்டிகள், 72 டி20 போட்டிகளில் பங்கேற்றது. 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி மொத்தம் 332 சர்வதேச போட்டிகளில் இந்திய அணியை கேப்டனாக வழிநடத்தினார். இது உலகில் வேறு எந்த கேப்டனும் இதுவரை நிகழ்த்தாத சாதனை! இனி நிகழ்த்துவதும் மிக மிக கடினமே! ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்த ரிக்கி பாண்டிங் 324 சர்வதேச போட்டிகளில் அந்த அணியின் கேப்டனாக வழிநடத்தி தோனிக்கு பின்னால் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
6. அதிக நாட் அவுட் சாதனையும் தோனி பக்கமே!
கிரிக்கெட்டில் பேட்டிங்கைப் பொறுத்தவரை தோனிக்கு சரியான அடைமொழி பினிஷர்தான். பல போட்டிகளை மிகச் சிறப்பாக வெற்றியோடு நிறைவு செய்வதில் தோனி தனிரகம். தோல்வி உறுதியானபோதும் போட்டியை இறுதிவரை விறுவிறுப்பாக கொண்டு செல்வதை அவர் விரும்பினார். இதனால் அதிக அழுத்தம் பந்துவீச்சாளர் மீது மாற்றப்படும். அவர்கள் அப்போது தவறு செய்தால் அதை தனக்கு சாதகமாக்குவதை அவர் தவறமாட்டார்.
350 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய தோனி 84 முறை ஆட்டமிழக்காமல் நாட் அவுட்டாக இருந்தார். தற்போது டி20 போட்டிகள் ஒருநாள் போட்டிகளை முன்னுரிமை அளிக்கப்படுவதால், இந்த சாதனை அதிக அச்சுறுத்தலுக்கு உள்ளாகவில்லை. சமிந்த வாஸ் மற்றும் ஷான் பொல்லாக் ஆகியோர் இச்சாதனைப் பட்டியலில் 72 நாட் அவுட்களுடன் 2 ஆம் இடத்தில் இணைந்துள்ளனர்.
ஒருநாள் போட்டிகளின் 2வது இன்னிங்சில் 51 முறை தோனி நாட் அவுட்டாக இருந்துள்ளார். இதில் 49 போட்டிகளில் இந்திய அணி வெற்றியை ருசித்துள்ளது. இதிலிருந்தே தோனி களத்தில் இருப்பது வெற்றிக்கு எவ்வளவு உதவியிருக்கிறது என்பதை தெளிவாக புரிந்துகொள்ளலாம்.
7. ஆறாம், ஏழாம் இடங்களில் களமிறங்கி எட்டா உயரத்தை தொட்ட தோனி!
ஆறு அல்லது அதற்கும் கீழான இடங்களில் தான் களமிறங்குவார் தோனி. ஆனால் அதற்காக ரன் குவிக்க அவர் தவறவில்லை. லோயர் மிடில் ஆர்டரில் களமிறங்கி சர்வதேச போட்டிகளில் தோனி குவித்த மொத்த ரன்கள் 10,268 ஆகும். இந்த இடங்களில் களமிறங்கிய வேறு எந்த பேட்ஸ்மேனும் இந்நாள்வரை 10 ஆயிரம் ரன்களை தாண்டியதில்லை. 2வது இடத்தில் இருக்கும் மார்க் பவுச்சர் 9,365 ரன்களையே எடுத்துள்ளார்.
இவ்வளவு மகத்தான சாதனைகளை நிகழ்த்திய தோனிக்கு நாளை (ஜூலை 7) பிறந்த நாள். அதை சிறப்பிக்கும் விதமாக ஜூலை 1 முதல் புதிய தலைமுறை இணையதளத்தில் தொடர்ச்சியாக கட்டுரை வெளியாகி வருகிறது.
முந்தைய கட்டுரைகள்: