விளையாட்டு

தோனிக்கே ‘மன்கட்’ விக்கெட்டா? - ஏமார்ந்து போன குர்ணல் பாண்ட்யா

தோனிக்கே ‘மன்கட்’ விக்கெட்டா? - ஏமார்ந்து போன குர்ணல் பாண்ட்யா

webteam

சென்னைக்கு எதிரான போட்டியில், தோனியை மன்கட் முறையில் ஆட்டமிழக்க முயற்சித்த குர்ணல் பாண்ட்யா ஏமாற்றமடைந்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின், பட்லரை மன்கிட் முறையில் ஆட்டமிழக்க செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அஸ்வின் எடுத்த இந்த முறையிலான விக்கெட்டிற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. கிரிக்கெட் விதிகளின் படி இது சரியென்றாலும், நட்பு அடிப்படையில் தவறானது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர். 

இந்நிலையில், மும்பையில் நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இண்டியன்ஸ் இடையிலான போட்டியிலும் ‘மன்கட்’ முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தோனியை ஆட்டமிழக்க செய்ய மும்பை அணியின் குர்ணல் பாண்ட்யா இத்தகைய முயற்சியை எடுக்க நினைத்தார். 

அதாவது, ஆட்டத்தின் 14வது ஓவரை அவர் வீசினார். சென்னை அணி 171 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடி வந்தது. தொடக்கத்திலே 3 விக்கெட்களை சென்னை அணி இழந்துவிட கேதர் ஜாதவும், தோனியும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். 14வது ஓவரின் 5வது பந்தினை வீசுவதற்காக ஓடிவந்த குர்ணால், பந்தினை வீசாமல் அப்படியே நின்றார். அதாவது, மன்கட் முறையில் தோனியை ஆட்டமிழக்க செய்ய நினைத்து எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால், நடந்ததோ முற்றிலும் வேறாக இருந்தது. தோனி தன்னுடைய பேட்டை கிரீஸில் இருந்து எடுக்கவே இல்லை. அதனால், குர்ணல் பாண்ட்யா ஏமாற்றத்துடன் திரும்பினார். 

தோனியை மன்கட் முறையில் ஆட்டமிழக்க முயற்சித்த குர்ணல் பாண்ட்யா ஏமாற்றமடைந்தார். இருப்பினும் அது எச்சரிக்கைக்காகவே அப்படி செய்தார் என்றும் தெரிகிறது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. 

15 வருடங்கள் கிரிக்கெட்டில் அனுபவமுள்ள தோனி விக்கெட் கீப்பிங்கில் மிகவும் பலமாக உள்ளார். அவர் தன்னுடைய துல்லியமான கணிப்பால் சாதுர்யமாக விளையாடி விக்கெட் கீப்பிங் செய்து வருகிறார். அதனால், கீப்பிங்கில் பெரும்பாலும் அவர் தவறுகள் செய்வதில்லை. அந்தவகையில் தான் சாதுர்யமாக இருந்து மன்கிட் விக்கெட்டில் இருந்து தப்பியுள்ளார்.