விளையாட்டு

"ராஞ்சியில் தோனி நிச்சயம் ஏதோ செய்திருக்க வேண்டும்" - பியூஷ் சாவ்லா ஆச்சரியம் !

"ராஞ்சியில் தோனி நிச்சயம் ஏதோ செய்திருக்க வேண்டும்" - பியூஷ் சாவ்லா ஆச்சரியம் !

jagadeesh

சிஎஸ்கே கேப்டன் தோனி ராஞ்சியில் நிச்சயம் ஏதோ செய்திருக்க வேண்டும் என அவரது பேட்டிங் திறனைக் கண்டு வியப்படைந்து சுழற்பந்துவீச்சாளர் பியூஷ் சாவ்லா பேசியுள்ளார்.

2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்குப் பின்பு சர்வதேசப் போட்டிகளில் ஏதும் தோனி பங்கேற்கவில்லை. இதனையடுத்து அவர் விரைவில் ஓய்வை அறிவிப்பார் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அவரது ரசிகர்கள் ஐபிஎல் போட்டிகளில் தோனியை பார்ப்பதற்கு ஆவலாகக் காத்திருக்கின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக அதுவும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து தோனி குறித்து கிரிக்கெட் வீரர்கள் பலரும் தொடர்ந்து தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். பல நாடுகளிலும் ஊரடங்கு அமலில் இருப்பதால் பல கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய பேட்டிகளை சமூக வலைத்தளம் வாயிலாகவே கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் சிஎஸ்கே அணியில் புதிதாக வருகை தந்துள்ள சுழற்பந்துவீச்சாளர் பியூஷ் சாவ்லோ சென்னையில் தோனியுடன் வலைப்பயிற்சியில் ஈடுபட்ட அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.

அது குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ள பியூஷ் சாவ்லா "உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், நீண்ட நாட்களாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்துவிட்டு, மீண்டும் களத்திற்கு வரும்போது விளையாட்டில் தடுமாற்றம் இருக்கும். ஆனால், தோனியிடம் அவ்வாறான தடுமாற்றத்தை நான் பார்க்கவில்லை. அவர் நிச்சயம் ராஞ்சியில் ஏதோ செய்திருக்க வேண்டும். பயிற்சி தொடங்கிய உடன் சில பந்துகளைச் சாதாரணமாக எதிர்கொண்டார். அதன்பின், அனைத்து பந்துகளையும் அடித்து ஆட ஆரம்பித்தார். எனக்கு ஒரே வியப்பாக இருந்தது" என்றார்.

மேலும் தொடர்ந்த அவர் "தோனி தினமும் அதிக நேரம் பயிற்சியில் ஈடுபட்டார். சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, தோனி ஆகியோர் ஒருநாளைக்கு இரண்டு முதல் இரண்டரை மணி நேரம் பயிற்சி மேற்கொண்டனர். ஆனால், இரண்டரை மணி நேரமும் இடைவேளை எடுக்காமல் ஒரு இளைஞர்போல் தோனி தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டார்" என ஆச்சரியம் விலகாமல் பேசியுள்ளார் பியூஷ் சாவ்லா.