தன்னுடைய கண் முன்னே இருந்த அனைத்தையும் அழிக்க நினைத்து அதில் வெற்றியும் பெற்றவர் தோனி என்று வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் மைக்கல் ஹோல்டிங் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி குறித்து யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார் மைக்கல் ஹோல்டிங். அப்போது "தோனி கேப்டனாக இருந்தபோது நான் அவர் உணர்ச்சிவசப்பட்டு பார்த்ததே இல்லை. விளையாட்டின் போக்கு தன் கையை விட்டு நழுவும் சூழ்நிலை நிலவும்போது, வீரர்களை அழைத்துப் அமைதியாக உரையாற்றுவார், பின்பு அனைத்தும் பொறுமையாக மாறும். இதுபோன்றுதோறு தாக்கத்தை தோனி கொண்டுள்ளார்" என்றார்.
தொடர்ந்து பேசிய ஹோல்டிங் "ஒருநாள், டி20 போட்டிகளில் மட்டுமல்ல டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனி 5 ஆயிரம் ரன்களை எடுத்துள்ளார். இத்தனைக்கும் தோனி ஒரு முழுமையான டெஸ்ட் பேட்ஸ்மேன் அல்ல. ஆனால் மூன்று விதமான போட்டிகளிலும் அவர் விக்கெட் கீப்பராக இருந்துள்ளார். இது மிகப்பெரிய விஷயமாக நான் பார்க்கிறேன்" என்றார்.
இறுதியாகப் பேசிய ஹோல்டிங் "ஸ்டம்புக்கு பின்னால் இத்தனை வகையான போட்டிகளுக்கும் கீப்பிங் செய்து, மிக முக்கியமாக ஒருநாள் போட்டிகளில் 11 ஆயிரம் ரன்களை நெருங்கியதெல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத சாதனைகள். அதிலும் அவர் அதிரடியான பேட்ஸ்மேனும் கூட. தன் கிரிக்கெட் வாழ்க்கை தொடங்கும்போதே தோனி முடிவு செய்திருக்க வேண்டும். அதாவது தன் கண்முன்னே இருக்கும் அனைத்தையும் அழிக்க வேண்டும் என்பதுதான் அது. அதனை செய்தும் காட்டியிருக்கிறார்" என்றார்.