விளையாட்டு

தோனி ஒரு பைக் பிரியர்! ஒருநாள் அவரிடம்.. - மலரும் நினைவுகள் பகிர்ந்த சீனிவாசன்

தோனி ஒரு பைக் பிரியர்! ஒருநாள் அவரிடம்.. - மலரும் நினைவுகள் பகிர்ந்த சீனிவாசன்

ச. முத்துகிருஷ்ணன்

சென்னை நகருக்கும் சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ். தோனிக்கும் இடையிலான உறவு வார்த்தைகளால் விவரிக்க இயலாதது. 2008 ஆம் ஆண்டு ஐபிஎல்லின் முதல் பதிப்பில் இருந்து தோனி சென்னை சூப்பர் கிங்ஸை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடி வருகிறார். இடையில் சிஎஸ்கே தடை செய்யப்பட்ட இரண்டு ஆண்டுகளை தவிர.! தோனி தலைமையில் சென்னை அணி நான்கு ஐபிஎல் பட்டங்களை வென்றுள்ளது. ஐந்து முறை இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. இது ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் தோனியை மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவராக உறுதிப்படுத்தியது.

தோனி ஜார்கண்டின் ராஞ்சியைச் சேர்ந்தவர் என்றாலும், சென்னையின் மஞ்சள் நிறத்துடனான அவரது உணர்வுபூர்வமான தொடர்பு அனைவரும் அறிந்தது. சென்னை முழுவதும் ‘தல’ என்று அன்புடன் அழைக்கப்படும் அவர், பிறந்த ஊரைப் போலவே சென்னை நகரத்துக்கும் சொந்தக்காரர். தோனிக்கும் சென்னைக்கும் இடையே மலர்ந்த இந்த காதலை விளக்க, சிஎஸ்கே உரிமையாளர் சீனிவாசன் தோனியின் மோட்டார் சைக்கிள் கதை ஒன்றை கூறினார்.

“தோனி ஒரு பைக் பிரியர்! சென்னை அணியில் தோனி இணைந்த முதல் நாளில் அவருக்கு ஒரு பைக்கை கொடுத்தோம். அவர் மாயமாகி விட்டார். அன்று சென்னை முழுவதும் அந்த பைக்கை ஓட்டிச் சென்றார். அவர் அந்த அளவுக்கு சென்னையில் பைக்கில் பயணம் செய்வதை விரும்புவார். திடீரென உங்கள் பக்கத்து பைக்கில் பயணம் செய்வது தோனியாக கூட இருக்கலாம்” என்று சீனிவாசன் தெரிவித்தார்.

சென்னை தோனிக்கு எந்த அளவுக்கு பிடிக்கும் என்றால், இந்த மண்ணில் தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்பதற்காக மட்டுமே இன்னும் மஞ்சள் ஜெர்சியில் களத்தில் இறங்கி ஆடிக் கொண்டிருக்கிறார். இதை தோனியே ஒருமுறை பேட்டியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.