விளையாட்டு

“அந்த முடிவால் தோனி மிகப்பெரிய தவறை செய்துவிட்டார்” - முன்னாள் வீரர் கடும் விமர்சனம்

ச. முத்துகிருஷ்ணன்

சிஎஸ்கே கேப்டன் பதவியில் இருந்து விலகியது தோனி செய்த மிகப்பெரிய தவறு என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் விமர்சித்துள்ளார்.

சிஎஸ்கே கேப்டன் பதவியில் இருந்து விலகியது தோனி செய்த மிகப்பெரிய தவறு என்று விமர்சித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப், தோனி தொடர்ந்து கேப்டனாக இருந்திருந்தால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஐபிஎல் 2022 சீசன் சிறப்பாக இருந்திருக்கும் என்று கூறியுள்ளார். ஐபிஎல் 2022 சீசனுக்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு, தோனி சிஎஸ்கே கேப்டன் பதவியை ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்தார்.

ஜடேஜா தலைமையின் கீழ் சிஎஸ்கே தனது எட்டு ஆட்டங்களில் ஆறில் தோல்வியடைந்தது. இதையடுத்து கேப்டன் பதவியை ராஜினாமா செய்த ஜடேஜா, மீண்டும் தோனியிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்தார். சென்னை அணி அதன் அடுத்த மூன்று ஆட்டங்களில் இரண்டில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் கணித ரீதியாக இன்னும் பிளே ஆஃப்களுக்கான பந்தயத்தில் நீடித்து வருகிறது.

இதுகுறித்து பேசிய முகமது கைஃப், சென்னையின் நிலையற்ற ஆடும் லெவன் மற்றும் தவறான கேப்டன்சி தேர்வுகள் இந்த சீசனில் அந்த அணிக்கு எவ்வளவு விலை கொடுத்தது என்பதை விளக்கினார். “சிஎஸ்கே கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகியது பெரிய தவறு. விளையாடும் லெவன் அணியில் தோனி இருந்தால் அவர் கேப்டனாக இருக்க வேண்டும். ஜடேஜா கேப்டன் பதவிக்குத் தயாராக இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. டி20களில் நீங்கள் விரைவான முடிவுகளை எடுக்க வேண்டும். மனம் தெளிவாக இருக்க வேண்டும். மேலும் அவர்கள் ஒரே ஒரு ஆட்டத்திற்குப் பிறகு கான்வே போன்ற தரமான வீரர்களை கைவிட்டனர். அதனால் அவர்கள் சிறந்த லெவனுடன் விளையாடவில்லை” என்று கூறினார் முகமது கைஃப்.

“மும்பை-சென்னை மோதலில் எப்போதும் பரபரப்பு இருக்கும். இரு தரப்பிலும் பெரிய வீரர்கள் உள்ளனர். இதுவும் ஒரு வரலாற்று போட்டி. அவர்கள் பல முறை இறுதிப் போட்டிக்கு வந்துள்ளனர். இந்த சீசனில் கிரிக்கெட், புள்ளிகள் அட்டவணையை பார்க்க வேண்டாம். அதனால் அவர்கள் சிறப்பாக விளையாடவில்லை என்றாலும் ரசிகர்கள் கண்டிப்பாக ஆட்டத்தை காண வருவார்கள்” என்றார் முகமது கைஃப்.

பிளே ஆஃப் வாய்ப்பில் தொடர்ந்து நீடிக்க சென்னை அணி இன்று விளையாடவுள்ள மும்பை போட்டி உள்பட இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வெல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.