விமானத்தில் தோனி பிசினஸ் கிளாஸ் இருக்கையில் அமர எப்போதும் விரும்பமாட்டார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
"மிட் டே" இதழுக்குப் பேட்டியளித்துள்ள ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தோனி குறித்த பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், "நமது சொந்த மண்ணில் விளையாடும்போது சிறப்பாக விளையாடிய வீரர்களை ஊக்கப்படுத்தும்விதமாக விமானத்தில் பயணம் செய்யும்போது அவர்களுக்கு பிசினஸ் கிளாஸ் இருக்கையை ஒதுக்கி மகிழ்விப்பார்கள். இது காலம்காலமாக இருந்து வரும் நடைமுறைதான். அந்த விமானத்தில் தொலைக்காட்சி குழுவும் பயணம் செய்யும்" என்றார்.
மேலும் தொடர்ந்த கவாஸ்கர், "விமானத்தில் பிசினஸ் கிளாஸ் இருக்கை எப்போதும் குறைவாகவே இருக்கும். அதில் பெரும்பாலும் கேப்டன், பயிற்சியாளர்கள் மற்றும் அணி மேலாளர்கள் இடம் பெறுவார்கள். இதில் சிறப்பாக விளையாடிய வீரருக்கும் இடம் கிடைக்கும். மேலும் மற்றவர்களுக்கு எகானாமி கிளாஸ் இருக்கையே ஒதுக்கப்படும். இந்த பிசினஸ் கிளாஸில் எப்போதும் முன்னாள் கேப்டன் தோனி அமர்ந்து நான் பார்த்தே இல்லை" என்றார்.
ஏன் இப்படிச் செய்ய வேண்டும் என்பதற்கு விளக்கமளித்த கவாஸ்கர் "இதுபோன்ற சின்ன சின்ன அங்கீகாரங்கள் வீரர்களுக்கு உத்வேகத்தைத் தரும். ஒரு குழுவாக அணி மேலும் சிறப்பாகச் செயல்படும், வீரர்களுக்கு இடையே ஒற்றுமை வளரும். இதுபோல எந்தவொரு உலக அணி வீரர்களும் செய்ய மாட்டார்கள். எனவே எனக்கு இந்த இந்திய அணியை நினைத்தால் பெருமையாகவும் கர்வமாகவும் இருக்கிறது" என்றார் அவர்.
தோனி குறித்து மேலும் பேசிய அவர் "கேப்டனாக இருந்தபோதும் அருக்கான பிசினஸ் கிளாஸ் இருக்கையில் அமர்ந்தது இல்லை. அவர் எப்போதும் சக வீரர்களுடன் எகானாமி கிளாஸ் இருக்கையில் அமரவே விரும்புவார். மேலும் சில நேரங்களில் தொலைக்காட்சி கேமராமேன்கள், சவுண்ட் இன்ஞ்சினீயர்களுடன் அமர்ந்தும் உரையாடி மகிழ்வார். மேலும் விராட் கோலியும் எகானாமி இருக்கையை விரும்புவார். அவர் தன்னுடைய பிசினஸ் இருக்கையை சிறப்பாக பந்துவீசிய பவுலர்களுக்கு விட்டுக்கொடுப்பார்." என்று தெரிவித்தார்.