ஐசிசியின் ஜூன் மாதத்துக்கான சிறந்த வீரராக நியூசிலாந்தின் தொடக்க பேட்ஸ்மேன் டேவான் கான்வே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மாதத்தின் சிறந்த வீரா்/வீராங்கனை என்கிற பெயரில் புதிய விருதை அறிமுகம் செய்துள்ளது ஐசிசி. சா்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வகை போட்டிகளிலும் சிறப்பாகச் செயல்படும் வீரர் வீராங்கனைகளை ஆண்டு முழுவதுமாக அங்கீகரிக்கும் வகையில் மாதந்தோறும் விருது வழங்கி ஐசிசி கெளரவித்து வருகிறது. தங்களுக்கு விருப்பமான வீரா், வீராங்கனைகளுக்கு அந்த விருது கிடைக்கச் செய்யும் வகையில் ரசிகா்கள் ஆன்லைன் மூலமாக வாக்குகளை செலுத்தலாம்.
முன்னாள் வீரா்கள், ஒளிபரப்பு நிறுவனங்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் அடங்கிய ஐசிசியின் வாக்கு செலுத்துதல் அகாடமியும் ரசிகர்களுடன் இதில் இணைந்து செயல்படும். விருதுக்கு தகுதியான நபர்கள், களத்தில் செயல்பட்டது, சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் வெளிப்படுத்திய ஆட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் ஐசிசியின் விருதுகள் பரிந்துரை குழுவால் தீா்மானிக்கப்படுவார்கள் என ஐசிசி தெரிவித்துள்ளது. வெற்றியாளா்கள் ஒவ்வொரு மாதத்திலும் அதன் 2-ஆவது திங்கள்கிழமை அறிவிக்கப்படுகின்றனர்.
முதல் மூன்று மாதத்துக்கான விருதுகளை இந்திய வீரர்களே பெற்றார்கள். ஜனவரி மாதத்தின் சிறந்த வீரராக ரிஷப் பந்த், பிப்ரவரி மாதத்தின் சிறந்த வீரராக அஸ்வின், மார்ச் மாதத்தின் சிறந்த வீரராக இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் ஆகியோர் தேர்வானார்கள். இந்நிலையில் ஜூன் மாதத்தின் சிறந்த வீரர், வீராங்கனைக்கான பரிந்துரைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டது.
மகளிர் பிரிவில் ஷஃபாலி வர்மா, ஸ்னேஹ் ராணா ஆகிய இரு இந்திய வீராங்கனைகளும் இங்கிலாந்தின் சோஃபியும் இடம்பெற்றார்கள். ஆடவர் பிரிவில் நியூசிலாந்தின் கான்வே, ஜேமிசன் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் டி காக் ஆகியோர் இடம்பெற்றார்கள். இந்நிலையில் ஆடவர் பிரிவில் ஜூன் மாதத்தின் சிறந்த வீரராக நியூசிலாந்தின் கான்வேயும், மகளிர் பிரிவில் இங்கிலாந்தின் சோஃபியும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.