கடந்த 2008-இல் ஐபிஎல் தொடர் ஆரம்பானது முதலே ‘இ சாலா கப் நம்தே’ என சொல்லி வருகிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. ஆனால் இதுவரை அந்த அணி சொன்னது போல ஒருமுறை கூட கோப்பையை வென்றதே இல்லை.
உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் அதிகம் கொண்ட அணியாக ஆர்.சி.பி அணி இருந்தும் கோப்பையை வெல்லாமல் போனதற்கான காரணம் என்ன என்பதை அலசுவோம்.
கோலி - டிவில்லியர்ஸை மட்டுமே நம்பியிருப்பது
பேட்டிங்கில் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலியும், தென்னாப்பிரிக்காவின் டிவில்லியர்ஸை மட்டுமே அதிகம் நம்பியிருக்கிறது பெங்களூரு அணி. இருவருமே அபாரமான பேட்ஸ்மேன்கள் தான். பேரண்டத்திலேயே அவர்கள் இருவருக்கும் நிகரான பேட்ஸ்மேன்கள் இல்லை என்று கூட சொல்லலாம். ஆனால் அனைத்து நேரத்திலும் அவர்கள் இருவர் மட்டுமே கைகொடுக்க வேண்டுமென அவர்களை மட்டுமே நம்பியிருக்கிறது ஆர்.சி.பி. அதனால் அவர்கள் இருவரது விக்கெட்டையும் வீழ்த்திவிட்டால் ஆர்.சி.பியின் கதை முடிந்தது என்று எதிரணி வியூகம் அமைப்பது உண்டு.
வெளிநாட்டு வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது
ஆர்.சி.பியின் பிளெயிங் லெவெனில் வெளிநாட்டு வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை உள்நாட்டை சேர்ந்த நட்சத்திர வீரர்களுக்கும் கொடுக்க வேண்டும் என கிரிக்கெட் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
மும்பை, சென்னை மாதிரியான அணிகள் வெளிநாடு மற்றும் உள்நாட்டு நட்சத்திர வீரர்களுக்கு சமமான முக்கியத்துவம் கொடுக்கும்.
ஆர்.சி.பியில் கோலியும், சஹாலும் தான் உள்நாட்டு நட்சத்திர வீரர்களாக இருக்கின்றனர்.
தோனிக்கு ஜடேஜா, ராயுடு, கேதார் ஜாதவ் போல கோலிக்கு சஹால் மட்டுமே இருக்கிறார். உமேஷ் யாதவ், வாஷிங்டன் சுந்தர் மாதிரியான வீரர்கள் கோலிக்கு கைகொடுக்க வேண்டும்.
இந்த சீசனில் இளம் வீரர் படிக்கல் பேட்டிங்கில் கோலிக்கு நம்பிக்கை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இறுதி கட்டடத்தில் பந்துவீச ஆளில்லை
‘எங்கள் அணி 30 சதவிகித போட்டிகளில் தோல்வி பெறுவதற்கு காரணம் இறுதி ஓவரில் பந்துவீச சரியான பவுலர் இல்லாதது தான்’ என ஆர்.சி.பியின் சஹால் துபாய் செல்வதற்கு முன்னர் ஆகாஷ் சோப்ராவுடனான பேட்டியில் தெரிவித்திருந்தார்.
‘16 - 17 ஓவர்கள் வரை எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு டைட் கொடுத்து 130 ரன்களுக்குள் அவர்களை நாங்கள் கட்டுப்படுத்தி இருந்தாலும் மீதமுள்ள சில பந்துகளில் 50 ரன்களுக்கு மேல் அடித்து விடுகிறார்கள். இதெல்லாம் கடந்த சீசன் வரை தான் இந்த முறை எங்களுக்கு பவுலிங்கில் நிறைய ஆப்ஷன்கள் இருப்பதால் அந்த சிக்கலுக்கு தீர்வு காண்போம்’ என சொல்லியுள்ளார்.
மூன்று முறை இறுதி போட்டி வரை முன்னேறியுள்ள ஆர்.சி.பி அணி கடைசி நேர பதட்டம் மற்றும் தவறான முடிவுகளால் ஐபிஎல் கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்துள்ளது.
துபாயில் நடக்க உள்ள 2020 ஐபிஎல் தொடரில் அந்த சிக்கலை எல்லாம் ஆர்.சி.பி களைவதற்கான வியூகங்களை வகுக்கலாம்.
வரும் 21ஆம் தேதியன்று சன்ரைசர்ஸ் அணியோடு முதல் போட்டியில் ஆர்.சி.பி விளையாட உள்ளது.