தியோதர் டிராபி இறுதிப் போட்டியில், கேதர் ஜாதவ் அதிரடியால் இந்திய பி அணி, 283 ரன்களை குவித்துள்ளது.
தியோதர் டிராபிக்கான ஒரு நாள் போட்டித் தொடரின் லீக் ஆட்டங்கள் நடந்து வந்தன. முதல் லீக் போட்டியில் இந்தியா ஏ -பி அணிகள் மோதின. இதில் பி அணி வெற்றி பெற்றது.
அடுத்த லீக் போட்டியில், இந்தியா ஏ - சி அணிகள் மோதின. இதில் இந்திய சி அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்திய ஏ அணி, வெளியேறியது. கடைசி லீக் போட்டி நேற்றுமுன் தினம் நடந்தது. இதில் இந்திய சி மற்றும் பி அணிகள் மோதின. இந்திய சி அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இறுதிப் போட்டி ராஞ்சியில் இன்று நடந்து வருகிறது. இதில் பார்த்திவ் படேல் தலைமையிலான இந்திய சி அணியும் சுப்மான் கில் தலைமையிலான பி அணியும் மோதி வருகின்றன.
டாஸ் வென்ற இந்திய பி அணி கேப்டன் பார்த்திவ் படேல் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். அதன்படி அவரும் கெய்க்வாடும் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். கெய்க்வாட், டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து ஜெய்ஸ்வால் வந்தார். அடுத்த சில நிமிடங்களில் பார்த்திவ் படேல் 14 ரன்களில் ஆட்டமிழக்க, தமிழக வீரர் அபராஜித் வந்தார். ஜெய்ஸ்வாலும் அபராஜித்தும் நிதானமாக ஆடினர். இந்த தொடர் முழுவது சிறப்பாக ஆடிய அபாராஜித் 13 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.
அடுத்து கேதார் ஜாதவ் வந்தார். நன்றாக ஆடி வந்த ஜெய்ஸ்வால் அரை சதம் அடித்தார். அவர் 54 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, கேதர் ஜாதவுடன் நிதிஷ் ராணா இணைந்தார். 20 ரன்களில் ராணா அவுட் ஆனதும் விஜய் சங்கர், ஜேதருடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுமையாக ஆடினர். சிறப்பாக ஆடிய கேதர் ஜாதவ் அரை சதம் அடித்தார். பின்னர் இருவரும் அதிரடியில் ஈடுபட்டனர். விஜய் சங்கர் 2 சிக்சர், 4 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்த நிலையில் இஷான் பொரேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்து கிருஷ்ணப்பா கவுதம், ஜாதவுடன் இணைந்தார். பதானியா வீசிய 49 வது ஓவரில் கவுதம் மூன்று சிக்சர்களையும் ஒரு பவுண்டரியையும் விளாசி ஆச்சரியப்படுத்தினர். கடைசி ஓவரை இஷான் பொரேல் வீசினார். முதல் பந்திலேயே கேதர் ஜாதவ் ஆட்டமிழந்தார். அவர் 86 ரன்கள் எடுத்தார். இறுதியில் இந்திய பி அணி, 7 விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் எடுத்தது. கவுதம் 10 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். இந்திய சி அணி தரப்பில் இஷான் பொரேல் 5 விக்கெட்டை வீழ்த்தினார். இதையடுத்து சி அணி ஆட இருக்கிறது.