விளையாட்டு

பேட்டிங்கில் சரவெடியாக வெடித்த டெல்லி வீரர்கள்.. கொல்கத்தாவுக்கு 216 ரன்கள் இலக்கு

பேட்டிங்கில் சரவெடியாக வெடித்த டெல்லி வீரர்கள்.. கொல்கத்தாவுக்கு 216 ரன்கள் இலக்கு

ச. முத்துகிருஷ்ணன்

பிருத்வி ஷா, வார்னரின் பொறுப்பான ஆட்டத்தால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 216 ரன்கள் என்ற கடின இலக்கை நிர்ணயித்தது டெல்லி கேப்பிடல்ஸ் அணி!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மதியம் 3.30 மணிக்கு துவங்கிய 19-வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியும், கொல்கத்தா அணியும் இன்று பலப்பரீட்சை நடத்தின. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 வெற்றி, ஒரு தோல்வி என 6 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மும்பைக்கு எதிராக வெற்றியுடன் இந்த சீசனை தொடங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அதன் பிறகு குஜராத், லக்னோவுக்கு எதிரான ஆட்டங்களில் தோல்வியை தழுவியது. வெற்றிப்பாதைக்கு திரும்ப டெல்லி கேப்பிடஸ் அணியும், வெற்றிப்பயணத்தை தொடரும் முனைப்பில் கொல்கத்தா அணியும் களமிறங்கின.

டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பவுலிங்கை தேர்வு செய்தார். டெல்லி அணி தரப்பில் பிருத்வி ஷாவும் டேவிட் வார்னரும் ஓப்பனர்களாக களமிறங்கினர். தொடர்ந்து சொதப்புவதாக கடும் விமர்சிக்கப்பட்ட வார்னர் இந்த ஆட்டத்தில் துவக்கத்திலே அதிரடி காட்டினார். கொல்கத்தாவின் நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்பட்ட உமேஷ் யாதவ் பந்துகளை எல்லைக்கோட்டுக்கு எளிதாக விரட்டினார் பிருத்வி ஷா. தன் பங்குக்கு வார்னரும் அடித்து ஆட ரன் ரேட் 10க்கு மேல் ஜெட் வேகத்தில் பயணிக்கத் துவங்கியது.

பேட் கம்மின்ஸ் வீசிய ஓவரில் பவுண்டரி, சிக்ஸர் என விளாசி டெல்லிக்கு அதிர்ச்சி அளித்தார் பிரித்வி ஷா. பார்ம் அவுட் என்று கூறியவர்களுக்கு தன் பேட்டால் பதிலளிக்க துவங்கினார் வார்னர். மிஸ்டரி ஸ்பின்னர் வருணின் பந்துகளை சிக்ஸர்களாக மாற, இந்த ஜோடியை எப்படிப் பிரிப்பது என ஸ்ரேயாஸ் அய்யருக்கு தலைவலியே உண்டானது. ஒருவழியாக வருணின் சுழலில் க்ளீன் போல்டாகி வெளியேறினார் பிருத்வி ஷா. 29 பந்துகளை மட்டுமே சந்தித்து 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களை விளாசி அரைசதம் கண்டு வெளியேறினார் பிருத்வி ஷா. ஆனால் கொல்கத்தா அணியால் நிம்மதிப் பெருமூச்சு விட முடியவில்லை. ஏனெனில் மறுமுனையில் வார்னர் தொடர்ந்து வான வேடிக்கை நிகழ்த்தியபடியே இருந்தார்.

அடுத்து வந்த ரிஷப் பண்ட் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் விளாசி அவுட்டாகி வெளியேறினார். லலித் யாதவ், ரோவ்மேன் பவல் ஒற்றை இலக்கத்தில் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். அடுத்ததாக வார்னரும் 61 ரன்கள் குவித்த நிலையில் வெளியேற திடீரென தடுமாறத் துவங்கியது டெல்லி அணி. அடுத்து ஜோடி சேர்ந்த அக்சர் படேலும் ஷர்துல் தாக்கூரும் தொடக்கத்தில் சில பந்துகள் நிதானமாக விளையாடினர். ஏதுவான பந்துகளை மட்டுமே சிக்ஸர், பவுண்டரிகளாக இந்த ஜோடி மாற்றியது.

இறுதியில் அதிரடி காட்டி சிக்ஸர்கள் பறக்கவிட்ட இருவரும் கொல்கத்தாவுக்கான இலக்கை 200க்கு மேல் கொண்டு நிறுத்தியிருந்தார்கள். 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 5 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் குவித்தது. தற்போது 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்குகிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.