விளையாட்டு

ஜெயிச்சும் பயனில்லையே! டெல்லி வருத்தம்

ஜெயிச்சும் பயனில்லையே! டெல்லி வருத்தம்

webteam

ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் புனே அணியை வீழ்த்தி டெல்லி அணி வெற்றிபெற்றது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி, புனே அணிகள் நேற்று மோதின. டெல்லியில் நடைபெற்ற போட்டியில் டாஸ் ஜெயித்த டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன், கருண்நாயர் களம் இறங்கினர். டெல்லி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரின் கடைசி பந்தில் சஞ்சு சாம்சனை (2 ரன்) பென் ஸ்டோக்ஸ், ரன்-அவுட் செய்தார். அடுத்து வந்த ஸ்ரேயாஸ் அய்யர் 3 ரன். ரிஷாப் பான்ட் 36 ரன் (22 பந்து 4 பவுண்டரி, 2 சிக்சர்), சாமுவேல்ஸ் 27 ரன், கோரி ஆண்டர்சன் 3 ரன்னிலும், கம்மின்ஸ் 11 ரன்களில் வெளியேற, நிலைத்து நின்று ஆடிய கருண் நாயர் மட்டும் 45 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் டெல்லி அணி 8 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் சேர்த்தது. அமித் மிஸ்ரா 13 ரன்னுடனும், சபாஷ் நதீம் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

பின்னர் 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய புனே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்களே எடுத்தது. இதனால் டெல்லி அணி வெற்றி பெற்றது. புனே அணியில் கேப்டன் ஸ்மித் 38 ரன் (32 பந்து 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), மனோஜ் திவாரி 60 ரன் (45 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) பென் ஸ்டோக்ஸ் 33 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டம் இழந்ததால் அந்த அணி தோல்வியைத் தழுவியது. டெல்லி அணியின் கருண்நாயர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

13-வது ஆட்டத்தில் ஆடியுள்ள டெல்லி அணிக்கு இது 6-வது வெற்றி. அந்த அணி ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. 13-வது ஆட்டத்தில் விளையாடிய புனே அணி சந்தித்த 5-வது தோல்வி இதுவாகும். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறலாம் என்ற நிலையில் ஆடிய புனே அணி தோல்வி கண்டதால் அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.