விளையாட்டு

பழைய ரெக்கார்ட், புது ரெக்கார்ட் ! டெல்லியை மிரட்டும் சிஎஸ்கே

பழைய ரெக்கார்ட், புது ரெக்கார்ட் ! டெல்லியை மிரட்டும் சிஎஸ்கே

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இடையே இன்று 2வது தகுதிச்சுற்று போட்டி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு செல்லும் என்பதால், இன்றையப் போட்டியில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர் டெல்லிக்கு எதிராக நடைபெற்ற இரண்டு லீக் போட்டிகளிலும் சென்னை அணி எளிதாக வெற்றி பெற்றுள்ளது. எனவே இன்றையப் போட்டியில் சிஎஸ்கே வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகவே தெரிகிறது. 

இன்றையப் போட்டியில் ஹைதராபாத்தை வென்றதுபோல சென்னைக்கு எதிராகவும் வெல்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. அடுத்த போட்டியிலும் முன்னேறிச்செல்வோம் என்று டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார். ஆனால் பழைய ரெக்கார்டுகளை ஆராய்ந்து பார்த்தபோது, சிஎஸ்கே அணியின் கைகளே ஓங்கியிருக்கிறது. இதுவரை நடந்த ஐபிஎல் டி20 தொடரில் 19 முறை டெல்லி - சென்னை அணிகள் மோதியுள்ளன. அதில் 13 முறை சிஎஸ்கே வெற்றிப் பெற்றுள்ளது, டெல்லி வெறும் 6 முறையே வென்றுள்ளது. கடைசியாக 2018 ஐபிஎல் லீக் சுற்றுப் போட்டியில் சிஎஸ்கேவை வீழ்த்தியுள்ளது டெல்லி.

இந்த சீசனில் நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் சிஎஸ்கே அணி டெல்லியை வீழ்த்தியுள்ளது. ஆனால், டெல்லி அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ரிஷப் பன்ட், ஐதராபாத்துக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடியதே வெற்றிக்கு உதவியது. தன் அதிரடி ஆட்டம் குறித்து பேசிய பன்ட் " டி20 ஆட்டங்களில் குறைந்த பந்துகளில் அதிக ரன்களை சேர்க்க வேண்டும். அதனால், பந்துவீச்சாளர்கள் எந்த வகையில் பந்துவீசினாலும் அதை விளாச வேண்டும். அதற்காகவே தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன்" என தெரிவித்தார்.

சிஎஸ்கேவை பொருத்த வரை பேட்டிங்கில் அதிரடி இல்லாமல் இருக்கிறது. வாட்சன் ஒரே ஒரு போட்டியில் மட்டும் 96 ரன்கள் எடுத்தார். அதன் பின்பு தொடர்ந்து சொதப்பி வருகிறார். தோனி மட்டுமே அணி எப்போதெல்லாம் சிக்கலில் இருக்கிறதோ அப்போதெல்லாம் அதிரடி மூலம் சிஎஸ்கேவை காப்பாற்றி வருகிறார். சிஎஸ்கேவை பொருத்தவரை பந்து வீச்சு மட்டுமே பலமாக இருக்கிறது. எனவே இன்றையப் போட்டியில் டெல்லி இளம் அணிக்கும் சிஎஸ்கே அனுபவ வீரர் அணிக்கும் போட்டி கடுமையானதாகவே இருக்கும்.