விளையாட்டு

நெருங்கும் ஐபிஎல் டி20 தொடர்: இன்னும் கேப்டனை முடிவு செய்யாத டெல்லி கேப்பிடல்ஸ்

jagadeesh

ஐபிஎல் போட்டிகள் அமீரகத்தில் அடுத்த மாதம் தொடங்க இருக்கும் நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக யார் செயல்படுவார் என்ற முடிவு இன்னும் எட்டப்படாமல் இருக்கிறது.

இந்தியாவில் இந்தாண்டு திட்டமிட்டதுபோல பார்வையாளர்களின்றி ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்பட்டாலும் கொரோனா பாதிப்பு அதிகரித்ததையடுத்து, இடையிலேயே போட்டி தொடர் நிறுத்தப்பட்டது. நீண்ட ஆலோசனைகளுக்கு பின்பு ஐபிஎல் 2021 சீசனின் எஞ்சியுள்ள ஆட்டங்கள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்தது. இதனையடுத்து செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 15 வரை போட்டிகள் நடைபெற உள்ளது.

இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இண்டியன்ஸ் உள்ளிட்ட அணிகள் ஏற்கெனவே அமீரகம் சென்றுவிட்டது. இந்நிலையில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி துபாய் புறப்படுகிறது. அதேபோல வரும் சனிக்கிழமை டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் அமீரகம் செல்கிறது. பல அணிகள் ஐபிஎல்லுக்கு ஆயத்தமாகும் நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு கேப்டன் யார் என இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது ஸ்ரேயாஸ் ஐயர் காயமடைந்த நிலையில் ரிஷப் பன்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதுவரை அந்த அணி 8 போட்டிகளில் விளையாடி 6 இல் வெற்றியும் 2 இல் தோல்வியடைந்து புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. இப்போது ஸ்ரேயாஸ் ஐயர் குணமடைந்து அணிக்கு திரும்ப இருப்பதால், அவரையே மீண்டும் கேப்டனாக்கலாமா அல்லது ரிஷப் பன்ட் தொடருவாரா என்ற குழப்பத்தில் இருக்கிறது டெல்லி கேப்பிடல்ஸ்.