விளையாட்டு

டெல்லி பந்துவீச்சை வெளுத்து வாங்கிய இஷான், பாண்ட்யா - 200 குவிப்பு!

டெல்லி பந்துவீச்சை வெளுத்து வாங்கிய இஷான், பாண்ட்யா - 200 குவிப்பு!

EllusamyKarthik

நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் குவாலிபையர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் துபாய் மைதானத்தில் விளையாடுகின்றன.

டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயஸ்  ஐயர் பவுலிங் தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. டி காக்கும், ரோகித் ஷர்மாவும் இன்னிங்க்ஸை ஓப்பன் செய்தனர். முதல் ஓவரில் டி காக் 15 ரன்கள் விளாசினார். 

டெல்லி அணியின் அஷ்வின் வீசிய இரண்டாவது ஓவரின் மூன்றாவது பந்தை சந்தித்த ரோகித் டக் அவுட்டாகி வெளியேறினார். அது இந்த ஆட்டத்தில் ரோகித் சந்தித்த முதல் பந்தும் கூட. தொடர்ந்து சூரியகுமார் யாதவும், டி காக்கும் கூட்டு சேர்ந்து அதிரடியாக விளையாடினர். 

பவர் பிளே ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 63 ரன்களை எடுத்து பலமான நிலையில் இருந்தது மும்பை. இருவரும் 62 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் டி காக், அஷ்வின் வீசிய எட்டாவது ஓவரில் பெரிய சிக்ஸ் அடிக்க முயன்று அதில் தோல்வி கண்டு தவானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 25 பந்துகளில் 40 ரன்களை எடுத்திருந்தார் டி காக். 

சூரியகுமார் யாதவ் 38 பந்துகளில் 51 ரன்களை கடந்திருந்த போது நோர்ட்ஜெ பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 

பொல்லார்டும் இரண்டு பந்துகளை சந்தித்த நிலையில் டக் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து வந்த குர்னால் பாண்ட்யாவும்  வந்த வேகத்தில் 13 ரன்னில் பெவிலியன் திரும்பினார். 

இஷான் கிஷன் மட்டுமே இறுதி வரை நிலைத்து நின்று விளையாடினார். 30 பந்துகளில் 55 ரன்களை அவர் எடுத்தார். 

ஹர்திக் பாண்ட்யா ஆட்டத்தில் அதிரடி காட்ட தன் பங்கிற்கு 14 பந்துகளில் 37 ரன்களை குவித்தார் அவர். அதில் ஐந்து சிக்ஸர்களும் அடங்கும். 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களை எடுத்தது மும்பை. 

டெல்லிக்காக அஷ்வின் அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். 120 பந்துகளில் 201 ரன்களை எடுத்தால் டெல்லி அணி இறுதி போட்டிக்கு முன்னேறலாம்.