விளையாட்டு

பலமான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் டெல்லி அணி - டாஸ் வென்று பவுலிங் தேர்வு

பலமான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் டெல்லி அணி - டாஸ் வென்று பவுலிங் தேர்வு

சங்கீதா

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 34-வது லீக் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரானப் போட்டியில், டெல்லி அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

15-வது சீசன் ஐபிஎல் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சூப்பர் லீக் போட்டிகள் பாதிக் கட்டத்தை எட்டியுள்ளநிலையில், அடுத்த சுற்று சூப்பர் லீக் போட்டியில் எந்தெந்த அணிகள் சாதிக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுவரை 33 லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ளநிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 34 லீக் போட்டியில், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன.

இதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி பேட்டிங்கில் களமிறங்குகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 4-ல் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 3-வது இடத்தில் வலுவாக உள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் அணி 6 போட்டிகளில் விளையாடி, 3-ல் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.

கடைசியாக டெல்லி அணி விளையாடிய போட்டியில் பஞ்சாப் நிர்ணயித்த 116 ரன்கள் இலக்கை 10.3 ஓவர்களில் எட்டி அபார வெற்றி பெற்றது. அணியில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையிலும் சிறப்பாக விளையாடி அசத்தியது டெல்லி அணி. முன்னதாக புனே எம்.சி.ஏ. கிரிக்கெட் மைதானத்தில் போட்டி நடைபெற இருந்தநிலையில், அந்த அணியில் அடுத்தடுத்த கொரோனா பாதிப்புகள் உறுதியானதால், பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு இன்று நடைபெறும் போட்டி மும்பை வான்கடே மைதானத்திற்கு மாற்றப்பட்டது.

டெல்லி கேப்பிடல்ஸ்:

பிருத்வி ஷா, டேவிட் வார்னர், சர்பராஸ் கான், ரிஷப் பந்த் (கேப்டன் & விக்கெட் கீப்பர்) , லலித் யாதவ், ரோவ்மன் பவல், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், முஸ்தபிசுர் ரஹ்மான், குல்தீப் யாதவ், கலீல் அகமது

ராஜஸ்தான் ராயல்ஸ்:

ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக், கருண் நாயர், ரவிச்சந்திரன் அஷ்வின், ஓபேட் மெக்காய், டிரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல்