தீப்தி ஜீவன்ஜி  எக்ஸ் தளம்
விளையாட்டு

அன்று கேலி கிண்டலுக்கு ஆளானவர்... இன்று பாராலிம்பிக்கில் சாதனை..! யார் இந்த தீப்தி ஜீவன்ஜி?

Prakash J

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் கடந்த ஜூலை மாதம் 26-ஆம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் திருவிழா, கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்தப் போட்டியில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமைகளை நிரூபித்து பதக்கங்களை வேட்டையாடினர். இந்தியா சார்பில், 117 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றதில், அவர்கள் 5 வெண்கலம் மற்றும் 1 வெள்ளிப் பதக்கத்துடன் 6 பதக்கங்களைக் கைப்பற்றினர்.

இதைத்தொடர்ந்து 17-வது பாராலிம்பிக் போட்டிகள், அதே பாரிஸ் நகரில் ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கியது. பாராலிம்பிக் தொடரில் மாற்றுத்திறனாளிகள், நிரந்தர காயமுற்றவர்கள், உடல் உறுப்பு குறைபாடுடைய 4,400 வீரர், வீராங்கனைகள் 22 விதமான போட்டிகளில் 549 பதக்கங்களுக்காக பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பாரிஸ் பாராலிம்பிக்கில் கலந்துகொண்டு இருக்கின்றனர். கடந்தமுறை இந்தியா 19 பதக்கங்களை வென்ற நிலையில், இந்தமுறை அதிக எண்ணிக்கையிலான பதக்கங்களை வீரர்கள் வெல்வார்கள் என்ற நம்பிக்கையுடன் இந்தியா இருக்கிறது. இந்தியா இந்தத் தொடரில் இதுவரை 3 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் உட்பட 20 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 19-வது இடத்தைப் பிடித்துள்ளது. இதில் நேற்று மட்டும் இந்தியா 5 பதக்கங்களை வென்று அசத்தியது. நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 400 மீட்டர் டி20 இறுதிப் போட்டியில் தீப்தி ஜீவன்ஜி வெண்கலப் பதக்கம் வென்றார். பாராலிம்பிக்கில் அவர் வெண்கலப் பதக்கம் வென்றதையடுத்து அவரைப் பற்றிய பேச்சுகள் மீண்டும் பேசுபொருளாகி வருகிறது.

இதையும் படிக்க; தொடர்ந்து 10ஆண்டுகள்! மனைவிக்கு போதைப்பொருள் கொடுத்து 50 பேரை பாலியல் வன்புணர்வு செய்ய வைத்த கணவர்!

இதுதொடர்பாக தீப்தி ஜீவன்ஜியின் தாயார் ஜீவன்ஜி தனலட்சுமி கடந்த மே மாதம் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டி மீண்டும் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. அதில் அவர், “தீப்தி சூரியக் கிரகணத்தின்போது பிறந்தவர். அவர் பிறக்கும்போதே அவருடைய தலை மிகவும் சிறியதாக இருந்தது. உதடுகள் மற்றும் மூக்கு சற்று வித்தியாசமாக இருந்தது. அவரைப் பார்த்த எங்களது உறவினர்களும், கிராமத்தினரும் மனவளர்ச்சி குன்றியவர் என்றும் குரங்கைப் போன்ற முக அமைப்பை உடையவர் என்றும் கூறி, அவர் மனம் புண்படும்படி கேலி செய்தனர்.

அத்துடன், அவரை ஆதரவற்றோர் இல்லத்திற்கு அனுப்பச் சொன்னார்கள். நாங்கள் அந்த தவறை செய்யவில்லை. எப்போதும் என் மகள், அமைதியாகத்தான் இருப்பார். தெருவிலுள்ள பிற குழந்தைகள் அவரை கேலி செய்தால் வீட்டுக்குள் வந்து அழுவார். நான் உடனே அவருக்கு இனிப்பு கொடுத்து ஆறுதல்படுத்துவேன். இன்று அவர் வெளிநாட்டில் போய் சாதித்து, தான் ஒரு சிறந்த பெண் என்பதை அவர்களுக்கெல்லாம் நிரூபித்துள்ளார்” எனத் தெரிவித்திருந்தார். இந்த பேட்டிதான் இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க; தொடரும் போர்... உக்ரைனில் 4 முக்கிய அமைச்சர்கள் ராஜினாமா!

யார் இந்த தீப்தி ஜீவன்ஜி?

தெலங்கானா மாநிலம் வாரங்கலில் ஜீவன்ஜி யாதகிரி - ஜீவன்ஜி தனலட்சுமி தம்பதியருக்கு மகளாகப் பிறந்தவர். அறிவுசார் குறைபாடுடைய தீப்தியை, சக கிராமத்தினர் கேலி செய்தனர். என்றாலும் ஓட்டத்தில் சிறந்து விளங்கினார். அதன்பயனாக தன்னுடைய பயணத்தை மெல்லமெல்ல மெருகேற்றியவர், கடந்த ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டில் 400 மீ. டி20 பிரிவில் தங்கம் வென்றார்.

அடுத்து, கடந்த மே மாதம் ஜப்பானில் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில், பெண்களுக்கான 400 மீ. டி20 பிரிவு ஓட்டத்தின் பைனலில் இலக்கை 55.07 வினாடியில் கடந்து, புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். தவிர, பாரிஸ் பாராலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார். ஜப்பானில் தீப்தி, தங்கப்பதக்கத்தை வென்றதையடுத்தே, அவரது தாயார் பேட்டி கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: நெசமாத்தான் சொல்றீங்களா!! 12 ஆண்டுகளாக தினமும் 30 நிமிடம் மட்டுமே உறக்கம்.. அசத்தும் ஜப்பானியர்!