விளையாட்டு

தீபக் ஹூடா-அக்சர் பட்டேல் பார்ட்னர்ஷிப்பால் தப்பித்த இந்திய அணி - 163 ரன் இலக்கு

தீபக் ஹூடா-அக்சர் பட்டேல் பார்ட்னர்ஷிப்பால் தப்பித்த இந்திய அணி - 163 ரன் இலக்கு

Rishan Vengai

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய 162 ரன்கள் அடித்துள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்குபெற்று விளையாடுகிறது. இந்நிலையில் இரு அணிகளும் மோதும் முதல் டி20 போட்டி, மும்பை வாங்கடே மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கியது. இந்திய அணியில் இளம் வீரர்களான சுப்மன் கில் மற்றும் சிவம் மாவி இருவரும் புதுமுக வீரர்களாக அறிமுகம் செய்யப்பட்டனர். இந்தியாவின் டி20 அணியில் 100ஆவது வீரராக ஷிவம் மாவி மற்றும் 101ஆவது டி20 வீரராக சுப்மன் கில் அணிக்குள் அறிமுகம் செய்யப்பட்டனர்.

டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. இஷான் கிஷான் மற்றும் சுப்மன் கில் கூட்டணி முதலில் களமிறங்கியது. முதல் ஓவரிலேயே அதிரடி காட்டிய இஷான் கிஷன் 2 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் அடித்து 17 ரன்களை விளாசினார். இஷான் நல்ல தொடக்கத்தை கொடுத்தாலும், சுப்மன் விரைவாகவே அவுட்டாகி 7 ரன்களுக்கு வெளியேறினார். பின்னர் களமிறங்கிய சூரியகுமார் யாதவ், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரும் வந்தவேகத்திலேயே நடையை கட்டினார். தொடர்ந்து களமிறங்கிய சஞ்சு சேம்சனும் சொதப்ப 46 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்திய அணி.

பின்னர் இஷான் கிஷனுடன் கேப்டன் ஹர்திக் பாண்டியா கைக்கோர்க்க, இருவரும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஹர்திக் பாண்டியா 4 பவுண்டரிகளை விரட்ட, 37 ரன்களுக்கு வெளியேறினார் இஷான் கிஷன். தொடர்ந்து ஹர்திக் பாண்டியாவும் வெளியேற, 14.1 ஓவரில் 94 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த இந்திய அணி 140 ரன்களை தான் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இறுதியாக ஜோடி சேர்ந்த அக்சர் பட்டேல் மற்றும் தீபக் ஹூடா இருவரும் இந்திய அணிக்கு நம்பிக்கை அளித்தனர். அக்சர் பட்டேல் 3 பவுண்டரிகள், 1 சிக்சர் விளாச, தீபக் ஹூடா 4 சிக்சர்களை பறக்கவிட இந்திய அணி 20 ஓவர் முடிவில் 162 ரன்கள் சேர்த்தது.

163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய இலங்கை அணி, இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கி ஆடிவருகிறது. 5 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 29 ரன்கள் எடுத்துள்ளது. அறிமுக வீரராக களமிறங்கிய மவி 2 விக்கெட்டுகளையும் சாய்த்தார்.