விளையாட்டு

பாகிஸ்தானின் வெற்றியை பறித்த இந்திய வம்சாவளி வீரர்!

பாகிஸ்தானின் வெற்றியை பறித்த இந்திய வம்சாவளி வீரர்!

webteam

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி திரில் வெற்றி பெற்றது. 

பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டி அபுதாபியில் நடந்து வந்தது. இதில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 153 ரன்களும், பாகிஸ்தான் அணி 227 ரன்களும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 249 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

(அசார் அலி)

அதிக பட்சமாக வாட்லிங் 59 ரன்னும், ஹென்றி நிக்கோல்ஸ் 55 ரன்னும் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஹசன் அலி, சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா தலா 5 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

இதையடுத்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் 2-வது இன்னிங்சை பாகிஸ்தான் அணி தொடங்கியது. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சில் பாகிஸ்தான் அணியின் தொடக்க விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன. இமாம் உல்-ஹக் 27 ரன்னிலும், முகமது ஹபீஸ் 10 ரன்னிலும், ஹாரிஸ் சோகைல் 4 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 48 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

4-வது விக்கெட்டுக்கு ஆசாத், அசார் அலியுடன் இணைந்தார். அணியின் ஸ்கோர் 130 ரன்னாக உயர்ந்த போது ஆசாத் (45 ரன்கள்) ஆட்டம் இழந்தார். அதன் பிறகு இறங்கிய வீரர்கள், வந்த வேகத்தில் ஆட்டம் இழந்ததால் போட்டி, நியூசிலாந்துக்கு சாதகமாக மாறியது.

(அஜாஸ் படேல்)

ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் அசார் அலி நிலைத்து நின்று ஆடினார். அவர் எப்படியும் பாகிஸ்தான் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்வார் என்றே எல்லோரும் எதிர்பார்த்தனர். சூழலும் அப்படித்தான் இருந்தது. ஆனால், மும்பையை பூர்வீகமாக கொண்ட சுழல்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல், பாகிஸ்தான் கனவை தகர்த்தார். இவருக்கு இதுதான் முதல் டெஸ்ட் போட்டி. கடைசி விக்கெட்டாக, அசார் அலியை (65 ரன்கள்) அஜாஸ் எல்பிடபிள்யூ ஆக்க, நியூசிலாந்து அணி 4 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. 

நியூசிலாந்து தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல் 5 விக்கெட்டும், சுழற்பந்து வீச்சாளர் சோதி, வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். அஜாஸ் படேல் ஆட்டநாயகன் விருது பெற்றார்.