விளையாட்டு

க்ருனால் பாண்டியா, பதோனியின் ஆமைவேக ஆட்டத்தால் கடுப்பான லக்னோ ரசிகர்கள்- ஸ்கோர் முழுவிவரம்

க்ருனால் பாண்டியா, பதோனியின் ஆமைவேக ஆட்டத்தால் கடுப்பான லக்னோ ரசிகர்கள்- ஸ்கோர் முழுவிவரம்

ச. முத்துகிருஷ்ணன்

டி காக், ஹூடா, ஸ்டோய்னிஸ் ஆகியோர் அபாரமாக ஆடிய போதிலும், க்ருனால் பாண்டியா, பதோனியின் ஆமைவேக ஆட்டத்தால் கொல்கத்தாவுக்கு எதிராக 176 ரன்களை எடுத்துள்ளது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!

இன்று நடைபெற்ற 2வது ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங்கை தேர்வு செய்தது. லக்னோ அணியின் ஓப்பனர்களாக டி காக், கே.எல். ராகுல் களமிறங்கின. முதல் ஓவரிலேயே லக்னோ அணிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. டிம் சவுத்தி வீசிய பந்தை சந்தித்த டி காக் அவசரமாக ஒரு ரன் எடுக்க முயன்றார்.

ராகுலும் க்ரீஸை விட்டு வெளியே வந்து ரன் எடுக்க ஓட, துரதிர்ஷ்டவசமாக ஸ்ரேயாஸ் ஐயரால் ரன் அவுட் ஆக்கப்பட்டார். ஒரு ரன்னைக் கூட எடுக்காமல், ஒரு பந்தைக் கூட சந்திக்காமல் டைமண்ட் டக் அவுட் ஆனார் கே.எல்.ராகுல். (ஒரு பந்தை சந்தித்து ஒரு ரன் கூட எடுக்காமல் அவுட்டானால் அது கோல்டன் டக்., ஒரு பந்தைக் கூட சந்திக்காமல் ஒரு ரன் கூட எடுக்காமல் அவுட்டானால் அது டைமண்ட் டக்!)

அடுத்து வந்த தீபக் ஹூடா, டி காக்குடன் இணைந்து அதிரடியாக விளையாடினார். ஷிவம் மாவி வீசிய ஓவரை ஹூடா வெளுத்தெடுக்க, டிம் சவுத்தி வீசிய ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் விளாசி அசத்தினார் டி காக். நரைன், அனுகுல் ராய், ஹர்ஷித் ரானா வீசிய ஓவர்களிலும் ஹூடா- டி காக் கூட்டணி அதிரடி காட்ட 6 ஓவர்களில் 66 ரன்களை எட்டியது லக்னோ அணி.

அதிரடி காட்டிய டி காக் 27 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். அந்த உற்சாகத்தில் நரைன் பந்துவீச்சில் அவர் நடையைக் கட்ட, அடுத்து க்ருனால் பாண்ட்யாவுடன் ஜோடி சேர்ந்தார் ஹூடா. க்ருனால் மெதுவான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் அதிரடியை தொடர்ந்தார் ஹூடா.

அரைசதம் நெருங்கிய நிலையில் அவரும் ரஸல் பந்துவிச்சில் அவுட்டாக, லக்னோ அணி நெருக்கடிக்கு உள்ளானது. அடுத்து வந்த ஆயுஷ் பதோனி க்ருனாலுடன் இணைந்து மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ஸ்கோர் மிக மெதுவாக உயரத் துவங்கியது.

க்ருனால் பாண்டியாவை ரஸல் வெளியேற்ற, பதோனியுடன் ஜோடி சேர்ந்தார் ஸ்டாய்னிஸ். அதிரடி ஆட்டத்தை துவங்கிய ஸ்டாய்னிஸ், ஷிவம் மாவி வீசிய ஓவரில் விஸ்வரூபம் எடுத்தார். ஹாட்ரிக் சிக்ஸரை விளாசி அசத்திய ஸ்டாய்னிஸ், அடுத்த பந்தில் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து வந்த ஹோல்டரும் மீதமிருந்த 2 பந்துகளில் சிக்ஸர் விளாச, அந்த ஓவரில் 30 ரன்களை அள்ளியது லக்னோ அணி.

கடைசி ஓவரில் ஒரு பவுண்டரி விளாசததால், 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களை குவித்தது. 27 பந்துகளை சந்தித்த க்ருனால் 25 ரன்களும், 18 பந்துகளை சந்தித்த பதோனி 15 ரன்களும் எடுத்தனர். ஜெட் வேகத்தில் உயர்ந்த ஸ்கோரை க்ருனால் பாண்டியா, ஆயுஷ் பதோனி ஸ்பீட் பிரேக்கர் போட்டு தடுக்காமல் இருந்திருந்தால், 200 ரன்களை எளிதாக கடந்திருக்கும் லக்னோ அணி. ஏனெனில் 11 ஓவர்களிலேயா லக்னோ அணி 100 ரன்களை எட்டிவிட்டது.

தற்போது 177 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். கொல்கத்தா அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஒரு ரன் கூட எடுக்காமல் முதல் விக்கெட்டை பறிகொடுத்தது கொல்கத்தா. 6 பந்துகளை சந்தித்த பாபா இந்திரஜித் ரன் கணக்கை துவங்கும் முன் நடையை கட்டினார். அதனை தொடர்ந்து 6 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் ஜமீரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். சற்று நேரம் தாக்குபிடித்த ஆரோன் பிஞ்ச் 14 ரன்களில் ஹோல்டர் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். நிதிஷ் ரானாவும் நிறைய பந்துகளை வீணடித்து வெறும் 2 ரன்னில் நடையைக் கட்டினார். 25 ரன்கள் எடுப்பதற்கு நான்கு விக்கெட்டுகளை இழந்தது கொல்கத்தா அணி. 8 ஓவர்கள் முடிவில் அந்த அணி 4 விக்கெட் இழப்பிற்கு 30 ரன் எடுத்துள்ளது.