இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் வெளிச்சமின்மை காரணமாக பாதியில் கைவிடப்பட்டது.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று தொடங்கியது. காலையில் மழை பெய்ததால் ஆட்டம் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. மதியம் ஒரு மணிக்கு டாஸ் போடப்பட்டது. இலங்கை கேப்டன் சண்டிமல் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார்.
லோகேஷ் ராகுல், தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆட்டத்தின் முதல் பந்தை சந்தித்த லோகேஷ் ராகுல் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அவரை தொடர்ந்து தவானும் 8 ரன்னில் நடையைக் கட்டினார். மூன்று விக்கெட்டுகளையும் இலங்கை வீரர் லக்மல் கைப்பற்றினார். இதனால் இந்திய அணி தடுமாறியது. பின்னர் புஜாராவுடன் கேப்டன் கோலி ஜோடி சேர்ந்தார்.
8.2 ஓவர்கள் வீசியிருந்த நிலையில் வெளிச்சமின்மையால் ஆட்டம் தடைப்பட்டது. பின்னர் 3 மணியளவில் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. 11 பந்துகளை சந்தித்த கோலி ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதனால், இந்திய அணி 10.1 ஓவரில் 17 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் 11.5 ஓவர்களில் வெளிச்சமின்மை காரணமாக மீண்டும் ஆட்டம் நிறுத்தப்பட்டது. சற்று நேரத்திற்கு பிறகு ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். புஜாரா 8, ரகானே 0, ரன்னுடன் களத்தில் உள்ளனர். இலங்கைக்கு எதிராக தொடர் வெற்றிகளை பெற்று வந்த இந்திய அணி தடுமாறியது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.