விளையாட்டு

குளோபல் டி20 கிரிக்கெட்: மீண்டு வந்த வார்னர் ஒரு ரன்னில் அவுட்!

குளோபல் டி20 கிரிக்கெட்: மீண்டு வந்த வார்னர் ஒரு ரன்னில் அவுட்!

webteam

குளோபல் டி20 கிரிக்கெட் போட்டியில் மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு களமிறங்கிய டேவிட் வார்னர் ஒரு ரன்னில் அவுட் ஆகி ஏமாற் றம் அளித்தார்.

குளோபல் டி20 கிரிக்கெட் தொடர் கனடாவில் நடந்து வருகிறது. இதில், ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர், பாகிஸ்தானின் ஷாகித் அப்ரிதி, இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா, வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல், சுனில் நரைன், ஆந்த்ரே ரஸல், பிராவோ, ஷமி உட்பட பலர் விளையாடுகின்றனர். ஐந்து அணிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி, நேற்று முன் தினம் நடந்தது.

இதில், ஷமி தலைமையிலான டொரண்டோ நேஷனல்ஸ் அணியும் கிறிஸ் கெய்ல் தலைமையிலான வான்கூவர் நைட்ஸ் அணியும் மோதின. இதில் டொரண்டோ நேஷனல்ஸ் அணி வெற்றி பெற்றது. பந்தை சேதப்படுத்திய வழக்கில் தடைவிதிக்கப்பட்டபின் முதல் முதலாக களமிறங்கிய ஸ்மித் 61 ரன்கள் எடுத்தார்.

இந்நிலையில் இரண்டாவது லீக் போட்டி, கிங் சிட்டியில் நேற்று நடந்தது. இதில் வின்னிபெக் ஹாக்ஸ் அணியும் மாண்ட்ரியல் டைகர்ஸ் அணியும் மோதின. ஹாக்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடை விதிக்கப்பட்டிருந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் துணை கேப்டன் டேவிட் வார்னர், ஹாக்ஸ் அணிக்காக ஆடினார். மூன்று மாதத்துக்குப் பின் பேட்டை பிடித்த டேவிட் வார்னர் ஒரு ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றினார். அவரது விக்கெட்டை மலிங்கா வீழ்த்தினார். அந்த அணியில் அதிகப்பட்சமாக மெக்டெர்மோட் 68 ரன்களும் டேரன் பிராவோ 54 ரன்களும் எடுத்தனர். மாண்ட்ரியல் டைகர்ஸ் தரப்பில் மலிங்கா 2 விக்கெட்டை வீழ்த்தினார்.

பின்னர் களமிறங்கிய மாண்ட்ரியல் டைகர்ஸ் அணி, 18.5 ஓவர்களில் 157 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியை தழுவியது. அந்த அணியின் சிக்கந்தர் ராசா அதிகப்பட்சமாக 30 ரன்கள் எடுத்தார்.