கடலூரைச் சேர்ந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் தீவிர ரசிகர், தனது சொந்த இசையில் சொந்த குரலில் நடனத்துடன் சிஎஸ்கே அணிக்காகவும், தோனிக்காகவும் பாடல் உருவாக்கி வெளியிட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள அரங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபி கிருஷ்ணன். இவர் வெளிநாட்டில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் இவருக்கு தோனி மீது இருந்த அளவு கடந்த பாசம். இந்த அதீத அன்பால் கடந்த ஆண்டு தனது வீட்டை சென்னை சூப்பர் கிங்ஸ் வண்ணமான மஞ்சள் நிறத்திற்கு மாற்றினார். அதில் தோனியின் படத்தை வரைந்து பாசத்தை வெளிக்காட்டினார். இது உலக அளவில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இந்த ஆண்டு கோபிகிருஷ்ணன் தனது சொந்த செலவில் பாடலாசிரியர் கானா ருத்ரா பாடல் வரிகளில், சபேஷ் சாலமான் இசையில் கோபிகிருஷ்ணனே பாடி அந்த பாடலுக்கு கோபிகிருஷ்ணன் நடனமாடி அதனை காட்சி படுத்தியுள்ளார். இந்த பாடலை சமூக வலைதளங்களில் வெளியிட திட்டமிட்டுள்ளார். இது மிகப்பெரிய அளவில் தோனி ரசிகர் மத்தியில் சென்றடையும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதற்காக அவரது குடும்ப உறுப்பினர்கள் 36 பேர் மூன்று நாட்கள் இரவு பகலாக அரங்கூர் கிராமத்தில் நடன காட்சிகளை படமாக்கியுள்ளனர். இதற்காக தோனி அணியும் உடை மாதிரி, திருப்பூரில் தனியாக ஆடை வடிவமைத்து பாடல் காட்சியில் உள்ள அனைவரும் ஒரே மாதிரியான உடையில் இருப்பது போல் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கோபிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்த பாடலுக்காக 1.5 லட்சத்திற்கும் அதிகமாக பணத்தை செலவு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார் ஒட்டு மொத்தமாக இந்த பாடல் காட்சிகள் 4.30 நிமிடம் இசையுடன் காட்சி படுத்தப்பட்டுள்ளது.