விளையாட்டு

தோற்றாலும் அன்பை கொட்டும் ரசிகர்கள்... சிலிர்த்து போன தோனி!

தோற்றாலும் அன்பை கொட்டும் ரசிகர்கள்... சிலிர்த்து போன தோனி!

EllusamyKarthik

அமீரகத்தில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் தொடரில் 12 ஆட்டங்களில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெறும் நான்கில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 

இந்த மோசமான பர்பாமென்ஸினால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் லீக்  சுற்றோடு தொடரை விட்டு வெளியேறியுள்ளது.

பதிமூன்று ஆண்டு கால ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறுவது இதுவே முதல் முறை. 

சென்னையின் வீழ்ச்சியை எதிரணி ஆதரவாளர்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் போட்டுக் கொண்டாடி வருகின்றனர். 

அதே நேரத்தில் சென்னை ரசிகர்கள் என்றென்றும் சி.எஸ்.கே தான் என கெத்தாக பதிலடி கொடுத்து வருகிறார்கள். பல ரசிகர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் மீதான தங்களது அன்பை பொழிந்து வருகிறார். 

உணர்வு ரீதியாக ரத்தத்தோடு ரத்தமாக சென்னை அணி எங்களுக்குள் இரண்டற கலந்துள்ளது. 11 சீசன் விளையாடியுள்ள சென்னை பத்து முறை PLAY OFF, எட்டு முறை பைனல் மற்றும் மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது எனவும் சொல்லி  வருகிறார்கள். 

சி.எஸ்.கேவின் ரசிகனாக இந்த சீசனில் வீழ்ச்சி பெற்றுள்ளது கொஞ்சம் வலிக்கிறது. இருப்பினும் ஒருவரிடம் பொன் நகை மாதிரியான உடமைகள் களவு போயிருந்தாலும் புன்னகையை இந்த உலகில் எவராலும் களவாட முடியாது. 

வெற்றியோ, தோல்வியோ மாறா புன்னகையோடு என்றென்றும் சி.எஸ்.கே பக்கம் தான் நிற்போம். 

இத்தனை ஆண்டுகளாக ரசிகர்களுக்கு FEAST வைத்து வந்த சென்னை இந்த ஒரு முறை தானே அதிலிருந்து தவறியுள்ளது. 

எது எப்படி இருந்தாலும் மஞ்சள் தான் எங்கள் நிறம், அது தான் எங்கள் அடையாளம், அது தான் பெருமையும் கூட என ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வெற்றியும், தோல்வியும் விளையாட்டில் சகஜம். ஒவ்வொரு ஆண்டும் எங்களை உற்சாகம் கொடுத்த அணி இந்த முறை அதிலிருந்து தவறி இருப்பதை நம்ப முடியவில்லை. மாபெரும் ஜாம்பவான் அணியின் ரசிகனாக இருப்பதால் எது எப்படியிருந்தாலும் எங்கள் விசில் உங்களுக்கு மட்டும் தான் என மற்றொரு ரசிகர் தெரிவித்துள்ளார்.

அப்படி சென்னையின் கோடான கோடி ரசிகர்கள் இந்த கடினமான தருணத்திலும் தங்களது ஆதரவை பொழிந்தனர்.

ரசிகர்கள் பொழிந்த இந்த அன்பிற்கு ரியாக்ட் செய்துள்ளார் சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி.

“சென்னைக்கு கிடைத்துள்ள ரசிகர்கள் அணியின் பெரிய பலம். அவர்கள் கிடைத்தது அணிக்கான வரம் என்றும் சொல்லலாம். வெற்றியோ, தோல்வியோ ரசிகர்கள் சென்னையின் பக்கம் தான். இருப்பினும் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கவே ரசிகர்கள் விரும்புவார்கள். அதனால் தான் ஆக்கபூர்வமான விமர்சனங்களை எடுத்து வைத்தனர். அது சென்னை மீது அவர்கள் வைத்துள்ள அன்பின் வெளிப்பாடு. 

சமயங்களில் விளையாட்டில் ஆடுகளத்தின் கண்டீஷன், வீரர்களின் செயல்பாடு, அதிர்ஷ்டம் என ஆட்டத்தின் முடிவுக்கான வாய்ப்புகள் எதுவும் நமது கட்டுப்பாட்டில் இல்லாமல் போனால் இது போன்ற கடினமான நேரத்தை எதிர் கொள்ள வேண்டியிருக்கும். 

இந்த சமயத்திலும் ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவு கொடுப்பது கிரிக்கெட் விளையாட்டை பற்றின புரிதல் அவர்களுக்கு இருப்பதால் தான். எங்களுக்கு கிடைத்திருப்பவர்கள் எங்களது கஷ்ட, நஷ்டங்களிலும் எங்கள் பக்கம் நிற்கின்ற மெய்யான ரசிகர்கள்” என தோனி தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடலூரில் தன்னுடைய வீடு முழுவதும் சிஎஸ்கே அணியின் வண்ணமிட்டு, சிஎஸ்கே லோகோ மற்றும் தோனியின் படங்களை வரைந்ததோடு வீட்டிற்கு ‘HOME OF DHONI FAN’ என்றும் பெயரிட்ட தன்னுடைய உணர்வுபூர்வமான ரசிகருக்கு தோனி மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் இதுகுறித்து பேசிய தோனி, “நான் அதை இன்ஸ்ட்டாகிராமில் பார்த்திருந்தேன். இது அன்பின் வெளிப்பாடு. அதே நேரத்தில் இது என்னை சார்ந்தது மட்டும் அல்ல. அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பெரிய ரசிகர் என்பதையும் நிரூபித்துள்ளார். அவர்களது உள்ளுணர்வின் வெளிப்பாடு இது. மேலும் இன்ஸ்ட்டாகிராம், ஃபேஸ்புக் போஸ்ட் அல்ல இது. காலத்தால் அழிக்க முடியாதது. அவரது குடும்பத்தினரின் முழு சம்மதத்துடன் தான் இதை அவர் செய்திருக்க முடியும். அதனால் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் எனது நன்றி” என்று உருக்கமாக கூறியிருந்தார்.