விளையாட்டு

எந்த இடத்தில் களமிறங்குவார் தோனி ? மைக்கல் ஹஸி சொன்ன தகவல் !

jagadeesh

இந்தாண்டு ஐபிஎல் தொடரின்போது சிஎஸ்கே கேப்டன் தோனி எந்த இடத்தில் களமிறங்கி பேட் செய்வார் என்பதை பயிற்சியாளர் மைக்கல் ஹசி தெரிவித்துள்ளார்.

13 ஆவது ஐபிஎல் டி20 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான பயிற்சிக்காக தோனி உள்ளிட்ட வீரர்கள் சென்னைக்கு நேற்று வந்தனர். மேலும் ஐபிஎல் தொடருக்கான பயிற்சிக்காக விரைவில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே செல்ல இருப்பதாக சிஎஸ்கே நிர்வாகம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது.

இது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு பேட்டியளித்துள்ள மைக்கல் ஹஸி "தோனி 4 ஆம் வீரராக களமிறங்குவதே சரியாக இருக்கும். அப்போதுதான் அணியை போட்டியின் சூழ்நிலைக்கு ஏற்ப வழிநடத்த சரியானதாக இருக்கும். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் போட்டியின் அன்றைய நிலவரத்துக்கு ஏற்ப தங்களை தயார்படுத்தி விளையாட வேண்டும். முழுமையான ஆடும் அணி எப்படி இருக்கும் என இப்போது சொல்ல முடியாது. இப்போதைக்கு போட்டிக்காக தயார்படுத்திக்கொள்வதே முதல் கட்டப் பணி" என்றார்.

மேலும் "சிஎஸ்கேவின் பலமே அனுபவம் வாய்ந்த வீரர்கள் அணியில் இருப்பதுதான். அவர்களுக்கு போட்டித் தொடருக்கு முன்பு தங்களை எப்படி தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது நன்றாகவே தெரியும். அமீரகத்தின் தட்பவெப்ப சூழ்நிலையை புரிந்துக்கொள்ள வேண்டும். சிஎஸ்கேவின் பலமே பேட்டிங் வரிசைதான். ஆனால் விளையாடும் அணி சரிசமமாக பலம் வாய்ந்து இருக்கும் வகையில் பார்த்துக்கொள்வோம்" என்றார் மைக்கல் ஹஸி.