நடப்பு சீசன் ஐபிஎல்லில் சென்னை சேப்பாக்கம் மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வரும் நிலையில் ஆடுகளங்கள் மிகவும் மோசமாக தயார் செய்யப்படுவதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஐபிஎல் தொடரின் முதல் இரு போட்டிகள் மும்பை மற்றும் சென்னையில் நடந்து வருகின்றன. இதில் மும்பை மைதானம் அதிக ரன்கள் விளாச ஏதுவாக இருந்த போதிலும், சென்னை மண்ணில் சராசரியான ஸ்கோரான 160 ரன்களை எட்டவே அணிகள் மிகவும் திணறின. சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான சென்னை மண்ணில் வேகப்பந்து வீச்சாளர்களையும் எதிர்கொள்ள முடியாமல் வீரர்கள் திணறி வருகின்றனர். எளிதில் வெல்லக் கூடிய இலக்குகளைக் கூட எட்ட முடியாமல் திணறின. கொல்கத்தா - மும்பை, ஹைதராபாத் - மும்பை, பஞ்சாப் - மும்பை அணிகள் இடையிலான போட்டிகளே அதற்குச் சான்று.
இந்நிலையில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் இடையிலான போட்டியின்போது சென்னை மைதானம் மிகவும் மோசமாக இருந்ததாக முன்னாள் வீரர் அஜித் அகர்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னையின் அனலுக்கு விக்கெட்டுகள் கடினமாக இருப்பது இயல்பு தான், ஆனால் இருபது ஓவர் போட்டிக்கு ஏற்ப சிறிதளவு கூட மைதான ஊழியர்கள் ஆடுகளத்தை மேம்படுத்தவில்லை என சாடியுள்ளார். களமிறங்கும் இரு அணிகளும் சராசரியாக 160 ரன்கள் எடுக்க இயலும் என்ற வரலாறு கொண்ட சென்னை மைதானத்தில் 130 ரன்களே பெரிய விஷயம் என்னும் அளவிற்கு ஆடுகளம் தயார் செய்யப்பட்டிருப்பது கவலையளிப்பதாக கூறியுள்ளார்.
காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ள ராஜஸ்தான் அணி வீரர் ஸ்டோக்சும் சென்னை மைதானம் பற்றி வேதனை தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடர் இன்னும் ஒரு மாதத்திற்கும் மேல் நீடிக்கவுள்ள நிலையில் ஆடுகளங்கள் 160 முதல் 170 ரன்கள் வரை எட்ட இயலும் அளவிற்கு இருக்க வேண்டும். 130 அல்லது 140 ரன்களுக்குள் அணிகள் ஆட்டமிழக்கும் அளவிற்கு இருந்தால் சிறப்பல்ல என ட்விட்டரில் கூறியுள்ளார்.
இருபது ஓவர் போட்டிகள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக மாறி வருவதாக விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில், தற்போது அதற்கு எதிர்மறையான விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன. பேட்டிங், பவுலிங் என இரண்டிற்கும் சமமான வாய்ப்பளிக்கும் ஆடுகளங்கள் அமைக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.