விளையாட்டு

ஒரே போட்டியில் 4 கோல்கள்! 61 முறை ஹாட்ரிக், 500+ கோல்கள்... சாதனை படைத்த ரொனால்டோ!

ஒரே போட்டியில் 4 கோல்கள்! 61 முறை ஹாட்ரிக், 500+ கோல்கள்... சாதனை படைத்த ரொனால்டோ!

Rishan Vengai

சவுதி அரேபியாவின் அல் நாஸ்ர் அணிக்காக விளையாடி வரும் கிறிஸ்டியானோ ரொனால்டோ, நேற்று நடந்த அல் வெஹ்தா அணிக்கு எதிரான போட்டியில் 4 கோல்களை அடித்து அசத்தியுள்ளார்.

சவுதி அரேபியா கால்பந்து லீக் தொடரானது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது. போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, நடந்து முடிந்த கால்பந்து உலகக்கோப்பைக்கு பிறகு மான்செஸ்டர் கிளப் அணியிலிருந்து வெளியேறி சவுதி அரேபியாவின் அஸ் நாஸ்ர் கிளப் அணியில் விளையாடுவதற்காக 200 மில்லியன் யூரோக்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இவருக்கெல்லாம் எதுக்கு 200 மில்லியன் சம்பளம்! ஓய்வெடுக்க சொல்லுங்க!

இந்நிலையில் சவுதி ப்ரோ லீக் கால்பந்து தொடரின் பாதியில் அல் நாஸ்ர் அணியில் இணைந்த ரொனால்டோ, அல் நாஸ்ர் அணியில் 3 போட்டிகளை கடந்துள்ளார். பங்கேற்ற முதல் போட்டியில் பல்வேறு எதிர்ப்பார்ப்புகளுக்கிடையே களமிறங்கிய ரொனால்டோ, கோலடிக்க கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் தவறவிட்டார்.

அந்த போட்டியில் அல் நாஸ்ர் அணி வெற்றிபெற்றிருந்தாலும், ரொனால்டோ சுலபமான வாய்ப்புகளை கூட கோலாக மாற்றாதது, பல்வேறு தரப்பினரால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது. மெஸ்ஸியின் ரசிகர்கள் பலர், “இவருக்கு எதற்கு 200 மில்லியன் சம்பளம்? அவரை ஓய்வு பெற சொல்லுங்கள். மான்செஸ்டர் அணியின் ரசிகர்கள் இருங்கள்... இப்படி போட்டி நடக்கிறது என்றே எங்களுக்கு இப்போது தான் தெரியும், நாங்கள் மான்செஸ்டர் போட்டியை பார்த்துகொண்டிருக்கிறோம்” என கடுமையான விமர்சனங்களை வைத்தனர்.

61 நிமிடத்திற்குள் 4 கோல்கள்!

அதைத்தொடர்ந்து அல் நாஸ்ர் அணிக்காக விளையாடிய 2ஆவது போட்டியில், தனது முதல் கோலை பதிவு செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் ரொனால்டோ. இந்நிலையில் நேற்று நடந்து முடிந்த அல் வெஹ்தா அணிக்கு எதிரான போட்டியில், 4 கோல்களை வெறும் 61 நிமிடத்தில் அடித்து, அவர் மீது வைக்கப்பட்ட அனைத்து விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்து அசத்தியுள்ளார் ரொனால்டோ.

போட்டி தொடங்கப்பட்ட 21ஆவது நிமிடத்தில் முதல் கோலடித்த ரொனால்டோ, 40, 51, 61 என அடுத்தடுத்த நிமிடங்களில் 4 கோல்களை பதிவு செய்து அரேபிய கால்பந்து லீக் தொடரையே கொண்டாட்டத்திற்கு எடுத்து சென்றார். 4 கோல்களை பதிவுசெய்த அல்நாஸ்ர் அணி, 4-0 என்ற கணக்கில் போட்டியை வென்று, புள்ளி பட்டியலில் முதல் இடத்தை தக்கவைத்துள்ளது.

61 முறை ஹாட்ரிக் கோல்கள்!

கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது 38ஆவது பிறந்தநாளை கொண்டாடிய ரொனால்டோ, தனது கால்பந்து ரெக்கார்டு புத்தகத்தில் 61ஆவது முறையாக ஹாட்ரிக் கோல்களை பதிவு செய்துள்ளார். 30 வயதிற்கு முன் வரை 30 முறை ஹாட்ரிக் கோல்களை அடித்த அவர், அதற்கு அடுத்த 8 வருடத்தில் 31 முறை ஹாட்ரிக் கோல்களை அடித்து அசத்தியுள்ளார்.

503 கோல்களை கடந்து சாதனை!

அல் வெஹ்தா அணிக்கு எதிராக அவரடித்த 4 கோல்களுக்கு பிறகு லீக் போட்டிகளில் 500 கோல்களை கடந்து, 503 கோல்கள் அடித்துள்ளார் ரொனால்டோ. அதில் ரியல் மேட்ரிட் அணிக்காக 311 கோல்கள், மான்செஸ்டர் யுனைடட் அணிக்காக 103, ஜுவேண்டஸ் அணிக்காக 81 கோல்கள், ஸ்போர்டிங்கிற்காக 3, அல் நாஸ்ர் அணிக்காக 5* கோல்கள் என மொத்தம் 503 கோல்களை பதிவு செய்து சாதனை படைத்துள்ளார்.