ரொனால்டோ அல்-நஸர் அணியில் தனது கால்பந்து வாழ்க்கையை முடிக்க மாட்டார் என்றும் அவர் ஐரோப்பாவுக்குத் திரும்புவார் எனவும் தெரிவித்துள்ளார் அவரது மேலாளர் ரூடி கார்சியா.
சர்வதேச கால்பந்து விளையாட்டில் முன்னணி வீரராக வலம்வருபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இங்கிலாந்தின் பிரபலமான மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியில் இணைந்த பிறகு ரொனால்டோவின் புகழ் உலகம் முழுக்க பரவியது. ஆனால் கிளப் நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பிலிருந்து வெளியேறினார் ரொனால்டோ.
இதனைத்தொடர்ந்து சவுதி அரேபியாவின் அல்-நஸர் என்ற கிளப் அணியில் இணைந்து விளையாட இரண்டரை வருடங்களுக்குப் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் ரொனால்டோ. வருடத்துக்கு 177 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் 1770 கோடி) சம்பளத்துக்கு ரொனால்டோவை அல் நஸர் கிளப் ஒப்பந்தம் செய்தது. ஐரோப்பிய கிளப் கால்பந்தை விட்டுவிட்டு சவுதி அரேபிய கிளப் அணியில் ரொனால்டோ இணைந்தது அவரது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தற்போது 37 வயதான அவர் இனி ஐரோப்பிய கிளப் கால்பந்தில் விளையாட மாட்டாரா எனப் பலரும் கேள்வியெழுப்பி வந்தனர்.
இந்நிலையில், அல்-நஸர் அணியின் மேலாளர் ரூடி கார்சியா தெரிவிக்கையில், ரொனால்டோ ஓய்வை அறிவிக்கும் முன்னர் ஐரோப்பா அணிகளில் ஒன்றில் களமிறங்குவார் என தெரிவித்துள்ளார். ரொனால்டோ அல்-நஸர் அணியில் தனது விளையாட்டு வாழ்க்கையை முடிக்க மாட்டார் என்றும் அவர் ஐரோப்பாவுக்குத் திரும்புவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக இங்கிலாந்து பத்திரிக்கையாளர் பியர்ஸ் மோர்கன் நடத்திய நேர்காணலில் பேசிய ரொனால்டோ, ''நான் ஒரு தனித்துவமான வீரர். நான் இங்கு (சவுதி அரேபியா) ஒரு நல்ல விஷயத்திற்காக வந்துள்ளேன். ஐரோப்பாவில் கிட்டத்தட்ட அனைத்து சாதனைகளையும் முறியடித்து விட்டேன். இங்கு சில சாதனைகளை முறியடிக்க விரும்புகிறேன். வெற்றி பெறவும், விளையாடவும், வாழ்க்கையை ரசிக்கவும், நாட்டின் கலாச்சாரத்தில் ஒரு பகுதியாக இருக்கவும் நான் இங்கு வந்திருக்கிறேன்'' என்று ரொனால்டோ கூறியிருந்தார்.