விளையாட்டு

எதிரணி வீரருக்கு தோள் கொடுத்த ரொனால்டோ ! கண்கலங்கிய ரசிகர்கள்

எதிரணி வீரருக்கு தோள் கொடுத்த ரொனால்டோ ! கண்கலங்கிய ரசிகர்கள்

rajakannan

விளையாட்டு வீரர்களில் பல்வேறு ரகங்கள் உண்டு. மைதானத்திற்கு உள்ளேயும், வெளியேயும் அவர்கள் தங்களது நடவடிக்கைகளால் கவரப்படுவார்கள். கிரிக்கெட்டை பொறுத்த வரை தோனி போன்ற சில வீரர்களை அந்த வகையில் சேர்க்கலாம். அணியில் உள்ள சக வீரர்களிடமும், மற்ற நாட்டு வீரர்களிடமும் அவர்கள் நடந்து கொள்ளும் விதம் நம்மை ஆட்கொண்டுவிடும். தோனி தன்னுடைய ஆட்டத்திற்காக எல்லோராலும் கொண்டாடப்பட்டதைவிட அவரது பண்புக்காக தான் இன்றுவரை ரசிகர்கள் தூக்கி சுமக்கிறார்கள். 

அந்த வகையில் போர்ச்சுகல் அணியின் நட்சத்திர நாயகன் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனி ரகம். ஒரு கால்பந்தாட்ட வீரராக உலக அளவில் முன்னணி வீரராக திகழ்கிறார். அவர் விளையாடும் ஸ்டைல்காக இன்றளவும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். மைதானத்திற்குள் ஹீரோவாக வலம் வரும் ரொனால்டோ, நேற்றைய போட்டியில் எதிரணியைச் சேர்ந்த உருகுவே வீரர் காயமடைந்தபோது, அவரை கைத்தாங்கலாக அழைத்துச் சென்றது ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டுவிட்டது. 

உருகுவே வீரன் கவானி தான் இரண்டு கோல்கள் அடித்து போர்ச்சுகல் அணி வெளியேறக் காரணமாக இருந்தவர். தங்கள் அணிக்கு தோல்வியை பரிசளித்த கவானியை ரொனால்டோ அழைத்துச் சென்றது காண்போரை நெகிழச் செய்தது. போட்டியில் வெற்றி பெறாதபோதிலும், ரசிகர்களின் இதயங்களை வென்றார் ரொனால்டோ. இதுபோன்ற செயல்கள் ரொனால்டோவுக்கு புதிதல்ல. எத்தனையோ சம்பவங்கள் நடந்துள்ளன. 

மைதானத்திற்கு உள்ளே மட்டுமல்ல வெளியேயும் ரொனால்டோ ஒரு சிறந்த மனிதராக திகழ்ந்து விளங்குகிறார். அவரது உதவி செய்யும் குணம் எல்லோரும் அரிந்தது. தன்னுடைய வருமானத்தில் ஒரு பகுதியை பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக கொடுத்து வருகிறார். புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, அகதிகளாக தவித்து வரும் குழந்தைகளுக்கு பணம் கொடுத்து உதவி வருகிறார். அவரது இந்த தொண்டு செய்யும் குணத்தை பாராட்டி ஹியூமானிடேரியன் விருதும் ரொனால்டோவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

ரொனால்டோ ஒருமுறை கூறுகையில், “நீ மற்றவர்களுக்கு உதவி செய்யும் போது, கடவுள் உனக்கு இரண்டு மடங்காக கொடுப்பார் என என்னுடைய தந்தை கற்றுக் கொடுத்துள்ளார். அதுதான் என்னுடைய வாழ்வில் நடைபெற்றுள்ளது. தேவைப்படுவோருக்கு நான் உதவி செய்கையில், கடவுள் எனக்கு இரண்டு மடங்கு கொடுக்கிறார்” என்றார்.