உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்து விட்டது. ஆனால் இந்தியாவின் தோல்வியைக் காட்டிலும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருவது தோனியின் ஓய்வுதான். கடந்த மூன்று நாட்களாக தோனி குறித்த ஹேஸ்டேக்ஸ் ட்விட்டரில் ட்ரெண்ட்டாகி வருகின்றன.
அத்துடன் தோனியைச் சுற்றி தற்போது அரசியல் பேச்சுகளும் வரத்தொடங்கிவிட்டன. ஓய்வுக்குப் பிறகு தோனி பாஜகவில் இணையப் போகிறார் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன. பாஜகவைச் சேர்ந்த மத்திய முன்னாள் அமைச்சர் சஞ்சய் பஸ்வான் இது குறித்து இப்போது பேசியுள்ளார். பாஜகவில் தோனி இணைவார் என்றும் இது குறித்து பல நாட்களாக அவர் பேசி வருகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இதற்கு முன் கிரிக்கெட்டில் இருந்து அரசியல் வாழ்க்கைக்கு தளம் மாறிய வீரர்கள் யார்? ஒரு சின்ன ரீவைண்ட் அடிக்கலாமா?
மன்சூர் அலிகான் பட்டோடி:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான பட்டோடி முதல் கிரிக்கெட் வீரராக அரசியலில் களமிறங்கினார். இவர் முதலில் ஹரியான மாநிலத்தின் பிவானி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அந்தத் தேர்தலில் இவர் தோற்றார். அதன்பின்னர் 1991ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தின் போபால் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டார். இதிலும் தோல்வியை தழுவிய பட்டோடி தனது அரசியல் வாழ்க்கைக்கு இறுதியாக ஒரு முற்றுப் புள்ளி வைத்தார். இதில் இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால்? தமிழ்நாட்டில் மாபெரும் அரசியல் சக்தியாக வளம் வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பட்டோடியின் மிகத் தீவிரமான ரசிகர் என்பது பலர் அறியாதது.
நவ்ஜோத் சிங் சித்து:
கிரிக்கெட் விளையாட்டில் ‘சிக்சர் சித்து’ என்று அழைக்கப்பட்டவர் நவ்ஜோத் சிங் சித்து. இவர் பந்துகளை சிக்சருக்கு விரட்டி அடிப்பதில் வல்லவர். இவர் தனது அரசியல் பிரவேசத்தை 2004ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தொடங்கினார். அப்போது பாஜக சார்பில் போட்டியிட்டு தோற்றார். அதற்குப்பின் வெற்றி, தோல்வி என தேர்தலில் அனைத்தையும் பார்த்து வந்த சித்து, தற்போது பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் அமைச்சராக இருந்து வருகிறார்.
கீர்த்தி அசாத்:
அரசியல் குடும்பத்தில் பிறந்த கீர்த்தி அசாத், இந்திய அணியின் ஆல் ரவுண்டராக செயல்பட்டார். அத்துடன் 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற அணியில் இவர் இடம் பெற்று இருந்தார். இவரது தந்தை பகவத் ஜா அசாத் பீகார் மாநிலத்தில் முதலமைச்சராக இருந்தவர். எனவே தந்தை போல் அரசியலில் குதித்த கீர்த்தி அசாத் பாஜக சார்பில் போட்டியிட்டு மூன்று முறை பீகாரில் வெற்றிப் பெற்றார். எனினும் கடந்த பிப்ரவரி மாதம் இவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
முகமது கைஃப்:
இந்திய அணியில் சிறந்த ஃபீல்டராக விளங்கிய முகமது கைஃப் 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் களமிறங்கினார். அந்தத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தின் புல்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
கௌதம் கம்பீர்:
இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கௌதம் கம்பீர் இந்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார். இதனையடுத்து டெல்லியின் கிழக்கு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். இந்தத் தேர்தலில் வெற்றிப் பெற்று தற்போது பாஜக சார்பில் மக்களவையில் எம்பியாக பணியாற்றி வருகிறார். கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சர்வேதச கிரிக்கெட்டிலிருந்து இவர் ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் மட்டும் கிரிக்கெட் வீரர்கள் அரசியலில் களமிறங்கவில்லை, இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளிலும் கிரிக்கெட் வீரர்கள் அரசியலில் களமிறங்கியுள்ளனர்.
இம்ரான் கான்:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை உலகக் கோப்பை வெற்றிக்கு வழி நடத்தியவர் இம்ரான் கான். பாகிஸ்தான் அணி 1992ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற போது இம்ரான் கான் அந்த அணியின் கேப்டனாக இருந்தார். இவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் பாகிஸ்தான் டெஹரிக்-இ-இன்சாஃப் கட்சியை தொடங்கி களம் கண்டார். இந்தத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று பாகிஸ்தான் பிரதமராக தற்போது பணியாற்றி வருகிறார்.
அர்ஜூனா ரனதுங்கா:
இலங்கை அணி 1996ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது. அப்போது இலங்கை அணிக்கு கேப்டனாக இருந்தவர் அர்ஜூனா ரனதுங்கா. இவர் தனது ஓய்விற்குப் பிறகு இலங்கை அணியின் தேர்வுக்குழு தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்தார். அதன்பின்னர் அரசியலில் களமிறங்கிய இவர் 2015ஆம் ஆண்டு கப்பல் துறை அமைச்சராக பதவியேற்றார்.
மஸ்ரஃபி மோர்டாசா:
2019 ஆம் உலகக் கோப்பையின் பங்களாதேஷ் அணிக்கு கேப்டனாக இருந்தவர் மஸ்ரஃபி மோர்டாசா. இவர் பங்களாதேஷ் அணியின் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர்களுள் ஒருவர். அத்துடன் பங்களாதேஷ் அணிக்காக விளையாடிய சிறந்த பந்துவீச்சாளர்களில் இவரும் ஒருவர். இவர் கடந்த தேர்தலில் அவாமி லீக் கட்சியின் சார்பில் தேர்தலில் களமிறங்கினார். இந்தத் தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார். இதன் மூலம் கிரிக்கெட் விளையாடும் போதே எம்பியாக தேர்வான முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.