Virat Kohli - Yuvraj Singh Twitter
கிரிக்கெட்

“கோலி இல்லையென்றால் என்னால் கம்பேக் கொடுத்திருக்க முடியாது!” - விராட் குறித்து யுவராஜ் சிங்!

Rishan Vengai

2011ஆம் ஆண்டு உலக்கோப்பை தொடரில் ரத்த வாந்தி எடுத்த நிலையில் கேன்சரோடு உலகக்கோப்பையை வென்று கொடுத்த யுவ்ராஜ் சிங், அதற்கு பிறகு சிகிச்சைக்காக 10 மாதங்கள் ஓய்வில் இருந்தார். மீண்டும் செப்டம்பர் 2012-ல் நியூசிலாந்து அணிக்கு எதிராக கம்பேக் கொடுத்தார். ஆனால் அவரால் முன்பு போல் விளையாட முடியாமல் போனது. 2012 முதல் 2014 வரை அணிக்குள் வருவதும் போவதுமாய் இருந்த அவர், இலங்கைக்கு எதிரான 2014 உலக டி20 இறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததிற்கு பிறகு முற்றிலுமாக டிராப் செய்யப்பட்டார்.

Yuvraj

‘அவ்வளவு தான் யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது’ என பலரும் நினைத்த போது, ஜனவரி 2016-ல் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது விராட் கோலி தலைமையிலான T20 அணியில் மீண்டும் இடம்பிடித்தார். அப்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் காயம் ஏற்படவே, மீண்டும் அணியிலிருந்து வெளியேறினார்.

3-வது முறையாக கம்பேக் கொடுத்து சதத்தை பதிவு செய்த Yuvraj!

டி20 அணியிலிருந்து வெளியேறிய 35 வயதான யுவராஜ் சிங் மீது நம்பிக்கை வைத்து இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் மீண்டும் அவருக்கு ஒரு வாய்ப்பை வழங்கினார் அப்போதைய இந்திய கேப்டன் விராட் கோலி. 3ஆவது முறையாக கம்பேக் கொடுத்து தன்னுடைய 295வது ஒருநாள் போட்டியில் விளையாடிய யுவராஜ், இந்தியா-இங்கிலாந்து தொடரின் 2-வது போட்டியில் அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

அந்தப்போட்டியில் விரைவாகவே இந்திய டாப் ஆர்டர்கள் வெளியேற, அப்போது கைக்கோர்த்த யுவராஜ் சிங் மற்றும் தோனி இருவரும்... போட்டியை அங்கிருந்து வேறொரு தளத்துக்கு கொண்டு சென்று, வென்று கொடுப்பார்கள். இங்கிலாந்து அணிக்கு எதிரான அந்த போட்டியில் 98 பந்துகளில் தனது 14வது சதத்தை எட்டிய யுவராஜ் சிங், 150 ரன்களை அடித்து அசத்தினார். அது ஒருநாள் போட்டிகளில் அவருடைய அதிகபட்ச ஸ்கோராகும். அதன்பிறகு 2017 சாம்பியன் ட்ரோஃபிக்கான இந்திய அணியிலும் யுவராஜ் சிங்கிற்கு வாய்ப்பை வழங்கியிருந்தார் விராட் கோலி. இந்நிலையில் விராட் கோலி தன்னுடைய கிரிக்கெட் கம்பேக்கில் எந்தளவு பங்காற்றினார் என்று கூறியுள்ளார் யுவராஜ் சிங்.

“கோலி இல்லை என்றால் என்னுடைய கம்பேக் மீண்டும் வந்திருக்காது!”- யுவராஜ் சிங்

விராட் கோலி குறித்து பேசியிருக்கும் யுவராஜ் சிங், “கேன்சரில் இருந்து மீண்டு இந்திய அணிக்கு நான் திரும்பியபோது, ​​விராட் கோலி எனக்கு ஆதரவளித்தார். அப்போது அவர் என்னை ஆதரிக்கவில்லை என்றால், நான் மீண்டும் வந்திருக்க மாட்டேன். 2017 சாம்பியன் ட்ராபிக்கு பிறகு நான் 2019 உலகக்கோப்பையிலும் விளையாட விரும்பினேன்.

Dhoni - Yuvraj - Kohli

ஆனால் ‘2019 உலகக் கோப்பைக்காக தேர்வாளர்கள் உங்களைப் பார்க்கவில்லை’ என்று தோனி என்னிடம் கூறினார். விராட் கோலியும், தோனியும் முடிந்தவரை எனக்காக முயற்சித்தனர், ஆனால் முடியாமல் போனது. எல்லாவற்றையும் மீறி இன்றைய நாளில் அணிக்கு என்ன தேவை என்பது தானே முக்கியமானதாக இருக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.