Babar Azam web
கிரிக்கெட்

கோலியை போல் பாபர் அசாம் இருக்க வேண்டும்.. அவரால் 15,000 ரன்கள் அடிக்க முடியும்! - முன். PAK வீரர்

Rishan Vengai

பாகிஸ்தான் அணியின் கேப்டனாக மட்டுமில்லாமல், ஒரு சிறந்த பேட்ஸ்மேனாகவும் ஜொலித்துவந்த பாபர் அசாம், 2023 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணியின் மிகப்பெரிய சரிவுக்கு பிறகு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார்.

2023 ஒருநாள் உலகக்கோப்பையில் மோசமாக செயல்பட்ட பாகிஸ்தான் அணி லீக் சுற்றோடு வெளியேறியது, அப்போது கேப்டனாக இருந்த பாபர் அசாம் சகவீரர்களுடன் கோபமாக பேசியதாகவும், அதனால் வீரர்கள் சொல்லாமல்கொள்ளாமல் இந்தியாவை விட்டு வெளியேறியதாகவும் தகவல்கள் கசிந்தன.

babar azam

அதற்குபிறகு கேப்டன் பதவியிலிருந்து பாபர் அசாம் நீக்கப்பட்டு, புதிய கேப்டன்களாக டெஸ்ட் அணிக்கு ஷாத் ஷகீலும், டி20 அணிக்கு ஷாஹீன் அப்ரிடியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் தொடர் தோல்வி காரணமாக மீண்டும் ஷாஹீன் அப்ரிடியிடமிருந்த கேப்டன்சி பொறுப்பு பாபர் அசாமிடம் வந்தது.

ஆனால் பாபர் அசாம் தலைமையில் 2024 டி20 உலகக்கோப்பைக்கு சென்ற பாகிஸ்தான் அணி, இந்தியாவுடன் வெற்றிபெற வேண்டிய இடத்திலிருந்து தோற்றது மட்டுமில்லாமல், அமெரிக்காவுக்கு எதிராக வரலாற்று தோல்வியையும் சந்தித்து தோல்வி முகத்துடன் நாடுதிரும்பியது.

இதற்கிடையில் கேப்டன்சி மாற்றங்கள், சர்ச்சை சம்பவங்கள், மோசமான தோல்விகள் என அனைத்தின் எதிரொலியாக பாபர் அசாம் ஒரு பேட்ஸ்மேனாக மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளார். சொந்த மண்ணில் வங்கதேசத்துக்கு எதிராக மோசமான தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணியில், பாபர் அசாம் ஒருவீரராக அணியை காப்பாற்ற தவறிவிட்டார்.

அவரால் 15,000 ரன்கள் அடிக்க முடியும்..

பாபர் அசாமின் மோசமான பேட்டிங் பர்ஃபாமன்ஸ் குறித்து பேசியிருக்கும் முன்னாள் நட்சத்திர பாகிஸ்தான் கிரிக்கெட்டர் யூனிஸ் கான், பாபர் அசாம் சர்ச்சைகளில் சிக்காமல் பேட்டிங்கில் மட்டும் முழுமையான கவனம் செலுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பாபர் அசாம் குறித்து பேசியிருக்கும் யூனிஸ் கான், “பாபர் அசாம் சிறந்த செயல்திறன் கொண்டவர் என்பதால்தான் அவருக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது. இன்னும் சிறந்த கிரிக்கெட் வீரராக மாறவேண்டுமானால், அவர் சர்ச்சைக்குரிய விஷயங்களில் இருந்து விலகி, தன்னுடைய விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். ஒரு அணியை வழிநடத்துவதை விட பெரிய விஷயங்கள் நிறைய உள்ளன, அவருக்கு எது முக்கியம் என்பதை அவர்தான் தீர்மானிக்க வேண்டும். எனது வாழ்க்கையில் நான் 10,000 ரன்களைக் குவித்துள்ளேன், பாபர் அசாமால் 15,000 ரன்களை எடுக்க முடியும் என்று நான் நினைக்கிறேன்” என்று யூனிஸ் கான் கூறினார்.

மேலும் கோலியை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என கூறிய அவர், "விராட் கோலி தனது பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காக இந்திய அணியின் கேப்டன் பதவியை விட்டு வெளியேறியது போல், பாபர் அசாமும் அவருடைய விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும்" என்று அவர் மேலும் கூறினார்.