suryakumar yadav Twitter
கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் இளம் இந்திய அணி! யாருக்கெல்லாம் உலகக் கோப்பையில் வாய்ப்பிருக்கும்?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் மூத்த வீரர்கள் இல்லாத இளம் இந்திய அணி களம்காண்கிறது.

Viyan

ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத் தோற்று சாம்பியன் ஆகும் வாய்ப்பை இழந்திருந்த இந்திய அணி, இப்போது அதே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரில் விளையாடவிருக்கிறது. ஆனால் 'அதே அணி' என்று முழுமையாக சொல்லிட முடியாது. உலகக் கோப்பையில் ஆடிய ஆஸ்திரேலிய வீரர்கள் சிலர் இந்தத் தொடரில் இடம்பெற்றிருக்கிறார்கள். ஆனால் இந்திய அணியிலோ உலகக் கோப்பையில் ஆடிய 3 வீரர்கள் தான் இந்தத் தொடரில் பங்கேற்கப்போகிறார்கள். சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்த அணி இளம் வீரர்கள் நிறைந்ததாக இருக்கிறது.

இந்திய அணியின் ஸ்குவாடு

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), இஷன் கிஷன், யஷஷ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, ஜிதேஷ் ஷர்மா, ஷிவம் துபே, ரிங்கு சிங், அக்‌ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னாய், அவேஷ் கான், முகேஷ் குமார், ஆர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா

இந்திய அணியின் எதிர்காலம் என்று கருதப்படும் பல வீரர்கள் இத்தொடரில் பங்கேற்றிருக்கின்றனர். ஆனால் இவர்களுள் யாருக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கப்படப்போகிறது என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ஏனெனில் எப்படியும் அடுத்த ஆண்டு நடக்கும் டி20 உலகக் கோப்பையில் ரோஹித், கோலி, ஹர்திக், பும்ரா போன்ற சீனியர்கள் எல்லோரும் திரும்பிவிடுவார்கள். அப்படியிருக்கும்போது இவர்களுள் யாருக்கு, எந்த பொசிஷனில் விளையாடுபவர்களுக்கு முக்கியத்துவம் தரப்படும். யாரையெல்லாம் இந்திய அணி நிர்வாகம் முழுமையாக சோதிக்கப்போகிறது?

suryakumar yadav

டி20 உலகக் கோப்பையில் ஆடப்போகும் அணியில் ஒருசில பௌலிங் ஸ்லாட்கள், ஓரிரு மிடில் ஆர்டர் ஸ்லாட்கள் அதிகபட்சம் திறந்திருக்கும். பேக் அப் ஓப்பனர், பேக் அப் விக்கெட் கீப்பருக்கான இடங்களுக்கும் பரிசோதனை முயற்சிகள் நடக்கலாம்.

மிடில் ஆர்டர் பேட்டிங்கைப் பொறுத்தவரை திலக் வர்மா, ரிங்கு சிங் ஆகியோர் மீது அதிக கவனம் இருக்கும். ஏற்கெனவே இந்திய அணி எதிர்பார்க்கும் அந்த இடது கை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனுக்கான தேடலுக்கு திலக் வர்மா பதிலாக இருப்பார். அவரால் பந்துவீசவும் முடியும் என்பதால் அவரை பௌலிங்கிலும் இந்திய அணி அதிகம் பயன்படுத்த நினைக்கும். ரிங்கு சிங் ஒரு மிகச் சிறந்த ஃபினிஷராக உருவெடுத்துக்கொண்டிருக்கிறார். டி20 ஃபார்மட்டில் அவரால் போட்டியின் போக்கையே மாற்ற முடியும். அப்படியொரு வீரர் இருப்பது எந்த அணிக்குமே பலம். அதனால் அவர் மீதும் தேர்வாளர்களின் கண் அதிகம் படிந்திருக்கும்.

Rinku Singh

இவர்கள் போக இன்னொரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மீது பார்வை அதிகம் இருக்குமெனில் அது ஷிவம் துபே. ஏனெனில், ஹர்திக்கின் காயம் எந்த அளவுக்கு அணியின் காம்பினேஷனில் தாக்கம் ஏற்படுத்தும் என்பதை இந்திய அணி உணர்ந்துவிட்டது. அதனால் ஹர்திக் அளவுக்கு இல்லையென்றாலும், அவர் இடத்தை ஓரளவாவது நிரப்பக்கூடிய ஒரு வீரரை இந்திய அணி பேக் அப் ஆக வைத்திருக்க நினைக்கும். ரிஷப் பன்ட் காயத்திலிருந்து மீண்டு வராத பட்சத்தில் இஷன் கிஷனும் அந்த போட்டியில் இருப்பார்.

சூர்யகுமார் யாதவ், அக்‌ஷர் படேல் ஆகியோர் உலகக் கோப்பை அணியில் இடம்பெறுவது ஏறக்குறைய உறுதி. மற்ற லோயர் ஆர்டர்/பௌலிங் இடங்களில் அனைவருக்குமே இந்திய அணியில் இடம் கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. வாஷிங்டன் சுந்தர் பேட்டிங்கும் செய்வார் என்பதால், இனிவரும் தொடர்களில் சிறப்பாக செயல்பட்டால் அவரும் உலகக் கோப்பை அணியில் இடம்பெறலாம். வேகப்பந்துவீச்சாளர்கள் எல்லோருமே வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள நினைப்பார்கள்.

Tilak varma

நிறைய வீரர்களுக்கு உலகக் கோப்பை அணியில் இடம்பெறுவதற்கு வாய்ப்பு இருந்தாலும், தங்கள் இடத்தை உறுதி செய்ய அவர்களுக்கு அதிக போட்டிகள் இல்லை. உலகக் கோப்பைக்கு முன்பாக மொத்தமே 11 சர்வதேச டி20 போட்டிகளில் தான் இந்திய அணி விளையாடுகிறது. அதிலும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரில் சீனியர் பிளேயர்கள் விளையாடக்கூடும். அதனால் இந்த இளம் வீரர்களுக்கான வாய்ப்புகள் சற்று குறைவு தான். அதை அவர்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.