musheer khan web
கிரிக்கெட்

கழுத்தில் எலும்பு முறிவு.. சாலை விபத்தில் சிக்கிய முஷீர்கான்! கண்காணித்து வருவதாக MCA அறிவிப்பு!

இந்திய டெஸ்ட் அணிக்கான அடுத்த தலைமுறை வீரராக பார்க்கப்பட்ட முஷீர்கான், ஆஸ்திரேலியா A அணிக்கு எதிரான இந்தியா A அணியில் இடம்பெற்ற பிறகு சாலைவிபத்தில் சிக்கியதாக அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.

Rishan Vengai

இந்திய அணியில் எப்போதும் ஆல்ரவுண்டர்களுக்கு பஞ்சம் இருந்து வருகிறது, அதுவும் டெஸ்ட் அணியில் நிலைத்து விளையாடக்கூடிய ஆல்ரவுண்டர்கள் கிடைப்பதெல்லாம் குதிரைக்கொம்புதான்.

அந்தவகையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் அடுத்த ஆல்ரவுண்டர் வீரராக பார்க்கப்பட்டவர் சர்பராஸ் கானின் தம்பியான முஷீர் கான்.

அசாத்திய வீரராக ஜொலித்த முஷீர் கான்..

இந்தியாவுக்கான யு-19 அணியில் தலைசிறந்த வீரராக விளங்கிய முஷீர் கான், மும்பை அணிக்காக இதுவரை 9 முதல்தர போட்டிகளில் விளையாடி ஒரு இரட்டை சதம், மூன்று சதங்கள் மற்றும் ஒரு அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.

இந்த சதங்களில் கடந்த ரஞ்சிக் கோப்பை சீசனின் காலிறுதி போட்டியில் அடித்த இரட்டை சதம், அரையிறுதியில் அரைசதம், விதர்பாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் வெற்றிக்கு வித்திட்ட சதமும் அடங்கும். ரஞ்சிக் கோப்பை இறுதிப்போட்டியில் 136 ரன்கள் அடித்ததுடன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார் முஷீர்கான்.

முஷீர் கான்

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற துலீப் டிராபியில் இந்தியா ஏ அணிக்கு எதிராக விளையாடிய முஷீர்கான், ஆகாஷ் தீப், ஆவேஷ் கான், கலீல் அகமது மற்றும் குல்தீப் யாதவ் முதலிய வலுவான பவுலர்களுக்கு எதிராக 181 ரன்களை குவித்திருந்தார்.

இந்நிலையில் ஆஸ்திரேலியா A அணிக்கு எதிராக விளையாடுவதற்கு இந்தியா A அணியில் இடம்பெற்றிருப்பதாக தகவல் வெளியானது. அதற்குமுன் இரானி கோப்பையில் விளையாடவிருந்த முஷீர்கான், அங்கு விளையாட சென்றபோதுதான் கார் விபத்தில் சிக்கியுள்ளார்.

சாலை விபத்தில் சிக்கிய முஷீர்கான்..

2024 ரஞ்சிக்கோப்பை சாம்பியனான மும்பை அணிக்கும், ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கும் இடையேயான இரானி கோப்பை லக்னோவில் அக்டோபர் 1 முதல் அக்டோபர் 5ம் தேதிவரை நடைபெறவிருக்கிறது. இதற்கான மும்பை அணியில் இடம்பெற்றிருந்த முஷீர்கான், அவருடைய சொந்த ஊரிலிருந்து குடும்பத்துடன் லக்னோ சென்றபோது சாலை விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

musheer khan

மும்பை கிரிக்கெட் சங்கம் வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி, “19 வயதான டாப்-ஆர்டர் பேட்டர் முஷீர்கான், வெள்ளிக்கிழமையான செப்டம்பர் 27 அன்று இரானி கோப்பையில் பங்கேற்பதற்காக தனது குடும்பத்துடன் அசம்கரில் இருந்து லக்னோவுக்குச் சென்று கொண்டிருந்தபோது சாலை விபத்தில் சிக்கினார்.

முஷீர் தற்போது லக்னோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அவருக்கு கழுத்து பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளார். இருப்பினும் நிலையான உணர்வுடன் ஆபத்தில்லாத நிலையில் இருக்கிறார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மற்றும் மும்பை கிரிக்கெட் சங்கம் (எம்சிஏ) அவருக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்படுவதை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன.

முஷீர்கான் பயணத்திற்கு தகுதியானவுடன் கூடுதல் மருத்துவ சிகிச்சைக்காக அவர் மும்பைக்கு விமானத்தில் அழைத்துவரப்படுவார். இந்த மதிப்பீடுகளைத் தொடர்ந்த பிறகுதான் அவர் எப்போது குணமடைந்து வருவார் என்பதற்கான காலக்கெடு தீர்மானிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.

முஷீர் கான்

கிறிக்இன்ஃபோ அறிக்கையின் படி, “முஷீர்கான் தனது தந்தை மற்றும் இருவருடன் பயணம் செய்து கொண்டிருந்தபோது, ​​அவர்களின் SUV Toyota Fortuner கார், ஒரு தடுப்பின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது” என்று லக்னோ காவல்துறை தெரிவித்திருப்பதாக கூறியுள்ளது.